2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

மண்டியிட்ட விவகாரம்; மகஜரும் கையளிப்பு

Kogilavani   / 2018 ஜனவரி 23 , பி.ப. 06:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபர் ஆர்.பவானியை நிந்தித்து, அச்சுறுத்தியமையைக் கண்டித்து, பதுளையில் திங்கட்கிழமை மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி மற்றும் மறியல் போராட்டம் நடத்தப்பட்டதன் பின்னர், ஊவா மாகாண ஆளுநர் எம்.பி.ஜயசிங்கவின் செயலாளரிடம் மகஜரொன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.   
அந்த மகஜரில், ஆயிரம் பேர் கையொப்பமிட்டுள்ளனர்.   

மகஜரின் பிரதிகள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் ஆகியோருக்கு, அவசரத் தொலைநகல்கள் மூலம் அனுப்பப்பட்டுள்ளன.   

பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அபிவிருத்திச் சங்கம், ஊவா கல்வி அபிவிருத்தி நிலையம், புரட்சித் தமிழர் பேரவை, ஊவாசக்தி நிறுவனம், ஊவா வலம்புரி மலையக அமைப்பு, யுனிமீடியா அமைப்பு,

நலன்விரும்பிகள், ஊடகவியலாளர்கள், வர்த்தகப் பிரமுகர்கள், பெண்களுக்கெதிரான வன்முறையை ஒழிக்கும் அமைப்பு ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் இந்த மகஜரில் கையொப்பமிட்டுள்ளனர்.  மேற்படி மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,  “ஊவா மாகாண முதலமைச்சர் உத்தியோகப்பூர்வ விடயமொன்றுக்காக, பதுளை தமிழ் மகளிர் மகா வித்தியாலய அதிபரான பவானியைத் தனது உத்தியோகப்பூர்வ விடுதிக்கு கடமை நேரத்தில் அழைத்தமை, அதிபரை மண்டியிடச் செய்து மனவுழைச்சலுக்கு உள்ளாக்கியமைக்காக எமது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.  

“மேலும், மேற்படி பாடசாலையின் அதிபர் சுற்றறிக்கைக்கு ஏற்ப செயற்பட்டிருந்த போதிலும், அதனை முதலமைச்சருக்கு எடுத்துக்கூறி அதிபரைக் காப்பாற்ற முனையாத மாகாணக் கல்விச் செயலாளர் மற்றும் மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கும் எமது கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.   

“இச்சம்பவத்தால் பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட மனவுளைச்சல் காரணமாகவும் தொடர்ந்தும் பல தரப்பினரால் ஏற்படுத்தப்பட்டு வரும் அழுத்தங்கள் காரணமாகவும் எமது பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.  

“எனவே, எமது பாடசாலைக்கும் அதிபருக்கும் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு, நிரந்தரத் தீர்வொன்றையும் உரிய பாதுகாப்பையும் பெற்றுத் தருமாறு பணிவுடன் வேண்டுகின்றோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .