Sudharshini / 2015 செப்டெம்பர் 21 , பி.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
'இன்று எமது நாட்டில் சிறுவர்கள் மீதான வன்புணர்வுகள், துஷ்பிரயோகங்கள் அதிகரித்து வருகின்றன. நாடாளுமன்றம் அனுமதி வழங்கினால், வன்புணர்வுகளில் ஈடுபடுவோருக்கு மரணத்தண்டனையை அமுல்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் இந்த எண்ணத்துக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என மத்திய மாகாண சபையின் உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
டிக்கோயா சவுத் வனராஜா தோட்டத்தில் புனர்நிர்மாணம் செய்யப்படவுள்ள மாரியம்மன் ஆலயத்துக்கு கூரைத்தகரங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.
இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
'படித்தவர்கள் வாழுகின்ற நகரப்புறங்களிலும் கிராமங்களிலுமே இன்று சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளன. மலையகத்தை பொறுத்தவரையில் மிகக்குறைவாகவே இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருவதை எம்மால் அவதானிக்க முடிகிறது.
ஒற்றுமையாகவும் அறநெறிகளை பின்பற்றி வாழ்வதற்கும் எமது பிரதேசங்களில் அமைந்துள்ள ஆலயங்கள்; மிக முக்கிய பங்காற்றி வருகின்றன. சிறுவர்கள், இளைஞர்கள், யுவதிகள் என அனைவரும் கட்டுப்பாடுடனும் ஒழுக்கத்துடனும் வாழ்வதற்கு எமது சமயங்கள் வழிகாட்டி வருகின்றன.
'கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்' என்று கூறப்பட்டுள்ளது. அதனால்தான், நாங்களும் கோயில்களுக்கு முடிந்தளவு பங்களிப்பை செய்து வருகின்றோம். வனராஜா தோட்டம் என்பது தொழிலாளர் தேசிய சங்கம் வெற்றிபெற பாரிய அளவில் பங்களிப்பு வழங்கிய தோட்டமாகும். இத்தோட்டத்தின் வீதியை புனரமைப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்' என்றார்.
'அத்துடன், இங்கு வீடில்லாதவர்களுக்கு தனி வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கும் கிராமம் ஒன்றை உருவாக்குவதற்கும் அமைச்சர் திகாம்பரம் நடவடிக்கை எடுத்து வருகிறார். எனவே, ஒற்றுமையாக இருந்து செயற்பட வேண்டுமென உங்கள் அனைவரிடமும் கோருகிறேன்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .