Editorial / 2026 ஏப்ரல் 26 , பி.ப. 01:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

“மலையக மக்களின் சமூக மாற்றத்திற்கு கல்வியே பிரதான திறவுகோலாகும். நமது பிள்ளைகளுக்குச் சரியான, எதிர்காலத்திற்கு ஏற்ற, தரமான தொழில்நுட்பக் கல்வியை வழங்குவதன் மூலமே மலையகத்தின் சிறந்த எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியும். எனவே, பிள்ளைகளுக்கு அத்தகைய கல்வியை உறுதிப்படுத்துவதே பெற்றோர்களின் முதன்மையான பொறுப்பாகும்” என கலாநிதி பி.பி. சிவப்பிரகாசம் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் (NPP) தேசிய செயற்குழு உறுப்பினரும், தேசிய புலமையாளர் அமைப்பின் உறுப்பினருமான கலாநிதி பி.பி. சிவப்பிரகாசம், தெல்தோட்டை - லூல்கந்துர ஆதவன் பாடசாலையின் புதிய கட்டடத் திறப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார். பாடசாலை அதிபர் திரு. மகேந்திரன் அவர்களின் தலைமையில் 24 ஆம் திகதியன்று நடைபெற்ற இவ்விழாவில், பிரதி கல்வி அமைச்சர் டாக்டர் மதுர சனிரத்ன, அரசியல் பிரமுகர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து உரையாற்றிய கலாநிதி சிவப்பிரகாசம் தெரிவித்ததாவது:
“லூல்கந்துர ஆதவன் பாடசாலை 100 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டது. ஜேம்ஸ் டெய்லர் முதன்முதலில் இப்பகுதியில் தேயிலைத் தோட்டங்களை ஆரம்பிக்கும்போது, இந்தியாவில் இருந்து அழைத்து வரப்பட்ட மலையக மக்களின் வாரிசுகள் கல்வி கற்பதற்காகவே இப்பாடசாலை உருவாக்கப்பட்டது. இதன் முதல் கட்டடம் ஜேம்ஸ் டெய்லர் தங்கியிருந்த வீட்டின் ஒரு பகுதி எனக்கூறப்படுகிறது; இன்றும் அங்கு கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அந்த வரலாற்றுப் பின்னணியில், எமது அரசாங்கம் ஒதுக்கிய நிதியினூடாக அதிபரின் பெரும் முயற்சியால் இந்தப் புதிய மாடிக்கட்டடம் மிகக் குறுகிய காலத்தில் கட்டி முடிக்கப்பட்டு, இன்று மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் முழுமையான ஒத்துழைப்பு இருந்தால், இது போன்ற கட்டடங்களை அமைப்பது மாத்திரமன்றி, மலையகப் பிள்ளைகளின் கல்விப் பயணத்தையும் வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும்.
மலையகச் சமூகம் கல்வியின் மூலமே முன்னேற முடியும். ஏனெனில், நம்மிடம் பெரிய அளவிலான பொருளாதார வசதிகளோ, அரசியல் பலமோ அல்லது வர்த்தக சக்தியோ இல்லை. எனவே, கல்வியை மையமாகக் கொண்டே மலையகச் சமூகம் தலைநிமிர வேண்டும். இதற்கு ஆசிரியர்கள் மட்டுமன்றி பெற்றோர்களும், சமூக நலன் விரும்பிகளும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்காக முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக நிதியை ஒதுக்கியுள்ளது. சிறிய பாடசாலை மாணவர்களுக்கு மாதாந்த உதவித்தொகை, காலணிகளுக்கான கொடுப்பனவு மற்றும் போசாக்கு உணவுத் திட்டங்கள் வழங்கப்படுகின்றன. இலங்கைச் சமூகம் மாற்றமடைய வேண்டுமானால், அதற்கு வலுவான கல்வி அடித்தளம் அவசியம் என்பதையே இவை உணர்த்துகின்றன.
மேலும், தற்போதைய அரசாங்கத்தின் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் குறித்துப் பார்க்கையில், நிலக்கரி கொள்வனவு தொடர்பான மோசடி 2009ஆம் ஆண்டிலிருந்தே நடைபெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது அந்த ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளதே தவிர, அதற்காகத் தற்போதைய அரசை மட்டும் குற்றம் சுமத்த முடியாது. இது குறித்து முறையான விசாரணை நடத்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதுடன், சம்பந்தப்பட்ட அமைச்சரும் அவரது செயலாளரும் பதவ விலகி விசாரணைக்கு இடமளித்துள்ளனர். இது எமது அரசாங்கத்தின் நேர்மையான மற்றும் சுயாதீனமான நீதிப் போக்கைக் காட்டுகின்றது.
அதேபோல், 2.5 மில்லியன் டொலர் சைபர் மோசடி தொடர்பாகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இதில் அதிகாரிகளின் பொறுப்பின்மையே காரணம் என அடையாளம் காணப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினர் அரசியல் லாபத்திற்காகப் பல கருத்துகளைக் கூறினாலும், மக்களின் நிதியைப் பாதுகாப்பதில் இந்த அரசாங்கம் உறுதியாக உள்ளது. தவறுகள் நடக்கும்போது அதைச் சுட்டிக்காட்டுவது ஆரோக்கியமான ஜனநாயகப் பண்பாகும்” என்றார்.




24 minute ago
32 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
32 minute ago
51 minute ago