2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

லிட்டில்வெளி தோட்ட காணிகள் வெளியாருக்கு பகிர்ந்தளிப்பு

Kogilavani   / 2015 டிசெம்பர் 09 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பா.திருஞானம்

கண்டி, தெல்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட லிட்டில்வெளி தோட்ட காணிகளை, முறையற்ற வகையில் பகிர்ந்தளிப்பது தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கண்டி பிராந்திய காரியாலயத்தில் செய்யப்பட்டுள்ள இம்முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'கண்டி மாவட்டத்தில் தெல்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவில் லிட்டில்வெளி தோட்டத்தில் உள்ள காணிகளை பொருத்தமற்ற முறையில் பகிர்ந்தளிப்பது தொடர்பாக பின்வரும் விடயங்களை பத்திரிகையின் ஊடாக பொறுப்புவாய்ந்த அரசியல் தலைமைகளின் கவனத்துக்கு  கொண்டு வருகின்றோம்.

லிட்டில்வெளியில் தெல்தோட்டை நகருக்கு அண்மையில் 'எட்டேக்கர்' என்ற இடத்தில் அமைந்துள்ள இடுகாட்டு காணி,  மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென்று பிரித்து வழங்கப்படுவதாக பிரதேச செயலாளர் கூறுகின்றார். ஆனால், இது திட்டமிடப்பட்ட வீடமைப்பு திட்டம்.

காணிகளை பெறுபவர்கள் சொந்த வீட்டில் வசிப்பவர்கள். இவர்களுக்கு 20 பேச்சர்ஸ் காணி வழங்கப்படுகின்றது. தோட்டத்தில் 150 வருடங்களுக்கு மேலாக பரம்பரையாக உழைத்த மக்கள், வாழ வசிப்பிடம் இன்றி பலமுறை கிராம சேவகருக்கும் பிரதேச செயலாளருக்கும் கோரிக்கை விடுத்தபோதும் இக் கோரிக்கைகளை கவனத்திற்கொள்ளாது பிரதேச காணிகளை வெளியாருக்கு வழங்குவது பக்கச்சார்பான செயலாகும்.

வீடமைப்பு திட்டத்தில் 7 பேர்ச்சர்ஸ் மட்டுமே  தோட்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட நிலையில், தற்போது இவர்களுக்கு 20 பேச்சர்ஸ் காணி வழங்கப்படுவது நியாயமற்ற செயலாகும்.

லிட்டில்வெளி தோட்டத்தில் லயன் குடியிருப்புக்களில் 10க்கு12 அளவான அறைகளில் இரண்டு மூன்று குடும்பங்கள் சீவியம் நடத்துகின்றனர். இவர்களின் கோரிக்கைகளை உதாசீனம் செய்துவிட்டு தெல்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள லிட்டில்வெளி தோட்ட காணிகளை வெளியாருக்கு பிரித்து வழங்கும் செயற்பாடு அசாதாரணமானதாகும். தமது காரியாலயத்துக்கு அருகில் உள்ள மக்கள் படுகின்ற இன்னல்களை அறியாத பிரதேச செயலாளரின் இச்செயற்பாடு பிரதேச மக்களை மேலும் பாதிப்புக்கு உள்ளாக்கியுள்ளது.

தற்போது வழங்கப்பட்டுள்ள காணித்துண்டுகளில் ஒரே முகவரியை சேர்ந்த 5 பேருக்கு காணி வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் ஒரே குடும்பத்தை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும் என கருதுகின்றோம். இவர்கள் எந்த அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டார்கள்.

தெல்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட சில தோட்டங்களில் வாழ்கின்ற மக்கள், மழை பெய்தாலும்கூட வீட்டில் வசிக்க முடியாது பாடசாலைகளில் தஞ்சமடைகின்றனர். குறிப்பாக பட்டியகம, பட்டவீர, லூல்கந்துர தோட்டங்களில் வாழ்கின்ற மக்கள், 2015ஆம் ஆண்டிலும் இரண்டு தடவைகள் பாடசாலையில் தங்கியிருந்தனர். வருடா வருடம் இவர்கள் இவ்வாறு தஞ்சடைகின்றனர். இவர்களில் ஒருவரைக் கூட பாதிக்கப்பட்ட மக்களாக தெரிவுசெய்து காணி வழங்கப்படவில்லை.

பிரதேச செயலக பிரிவில் கடமையாற்றுகின்ற பெரும்பாலான கிராம உத்தியோகத்தர்கள், இக்காணி பகிர்வு நடவடிக்கையை தவறென கண்டித்தாலும் தமது பதவிநிலை காரணமாக வெளிப்படுத்த முடியாதுள்ளனர்.

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணி வழங்குவதென்றால் அவர்கள் வசிக்குமிடம் பரிசீலிக்கப்பட்டு,  நிபுணர்களின் அறிக்கையை பெற்று உண்மையாக அனர்த்தமேற்படக்கூடிய இடமா என்று ஆய்வுசெய்து அவர்களின் பெயர் விவரங்கள் செயலகத்தில் காட்சிப்படுத்தப்பட வேண்டும். அப்படி எதுவுமே இங்கு நடைபெறவில்லை. பெரும்பாலான கிராம உத்தியோகத்தர்களுக்கே விடயம் தெரியாதுள்ளது.

பாதிக்கப்பட்டு இத்தோட்டத்திலேயே மிக மோசமான சூழ்நிலையில் வாழும் மக்களையும் பாதிக்கப்பட்டவர்களாக கருதி, காணி பகிர்வு நடவடிக்கையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .