Princiya Dixci / 2015 செப்டெம்பர் 24 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.செல்வராஜா
பண்டாரவளை ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தின் முன்பாக நிர்மாணிக்கப்பட்டிருந்த வழிப்பிள்ளையார் ஆலயபீடம் சேதப்படுத்தப்பட்டமை தொடர்பாக அகில இலங்கை சர்வமத ஒன்றியம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
மேற்படி ஆலயத்தில் நிர்மாணிக்கப்பட்டு வந்த வழிப்பிள்ளையார் ஆலயப்பீடமானது இனந்தெரியதோரால் நேற்று புதன்கிழமை (23) சேதமாக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த மேற்படி ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ சுதாகர சர்மா மேலும் குறிப்பிடுகையில்,
'முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின்போது, கொழும்பு பூமாரியம்மன் ஆலயம், தம்புள்ளை காளியம்மன் ஆலயம், உடுவரை ஸ்ரீ காளியம்மன் சிலை உட்பட சில ஆலயங்கள் சேதப்படுத்தப்பட்டு, அப்புறப்படுத்தப்பட்டன. இதேபோன்று இஸ்லாமிய பள்ளிவாசல்களும் சேதப்படுத்தப்பட்டன. இதுபோன்று இன, மத முறுகல் நிலைகளை தோற்றுவித்தமையினாலேயே முன்னாள்; ஜனாதிபதி தோல்வி கண்டார்.
தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, நல்லாட்சி இடம்பெறும்; வேளையில், முதல்முறையாக, பண்டாரவளை ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தின் முன்பாக நிர்மாணிக்கப்பட்டு வந்த வழிப்பிள்ளையார் ஆலயபீடம் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளது.
கடந்த சில வருடங்களுக்கு முன்பும் இனந்தெரியாதவர்களினால் இவ் வழிப்பிள்ளையார் ஆலயம் முற்றாக சேதப்படுத்தப்பட்டது.
இந்து சமய வணக்கஸ்தலங்கள் இவ்வகையில் சேதமாக்கப்படுவதை, எம்மால், ஜீரணிக்க முடியாது. நல்லாட்சியை மேற்கொள்பவர்கள் இதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
வழிப்பிள்ளையார் ஆலய பீடம் சேதமாக்கப்பட்டமை தொடர்பாக, ஜனாதிபதி, பிரதமர், இந்து சமய விவகார அமைச்சர், ஊவா மாகாண முதலமைச்சர் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு செல்லவுள்ளோம்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .