2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

168 பட்டதாரிகளுக்கு அரச தொழில் வாய்ப்பு பெற்றுக்கொடுத்தோம: பிரபா கணேசன்

Super User   / 2012 ஜூன் 11 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு முழுவதும் பரவலாக 168 பட்டதாரிகளுக்கு தமது முயற்சியின் அடிப்படையில் அவரவர் சொந்த பிரதேச செயலகங்கள் மூலமாக அரசாங்க வேலை நியமனங்கள் பெற்றுக்கொடுத்துள்ளோம் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

"நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் 75 பேர்களையே சிபாரிசு செய்யக்கூடிய சூழ்நிலை இருந்தது. இருப்பினும் ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவி செயலாளர் சமன் டீ. வடுகேயுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் மூலமாக மேலதிகமாக பலரை சிபாரிசு செய்யக்கூடிய சந்தர்ப்பத்தைப் பெற்றேன்.

இதன் மூலமாக இன்று 168 பட்டதாரிகளுக்கு அரசு நியமனங்களைப் பெற்றுக்கொடுத்துள்ளோம். இவர்கள் பயிற்சி காலத்தை நிறைவு செய்து நிரந்தர நியமனத்தை பெற்றுள்ளனர். கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தும் யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் வன்னி போன்ற மாவட்டங்களிலிருந்தே அதிகமான பட்டதாரிகள் என் ஊடாக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

நிலைமை இவ்வாறு இருக்க, கிழக்கு மாகாணத்தில் பட்டதாரிகளுக்கான அரச வேலைவாய்ப்பு விடயத்தில் அரச தரப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஊடக அறிக்கைகள் மூலமாக ஒருவரையொருவர் குற்றம் சுமத்துவது வேடிக்கையாக உள்ளது.

கிழக்கு மாகாணத்தில் மேலதிகமாக பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை எம்மால் பெற்றுக் கொடுக்க முடியும். வாக்களித்த மக்களுக்கு எதனையும் செய்யக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்ள முடியாமல் ஊடகங்கள் மூலமான அறிக்கை அரசியலை இவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்.

வேலைவாய்ப்பின்றி படித்து கஷ்டப்படும் பட்டதாரிகளுக்கு யார் வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுக்கின்றார் என்பது முக்கியமல்ல. மாறாக எமது தமிழ் இளைஞர் யுவதிகளின் வாழ்வு சிறப்பிக்க வேண்டும் என்பதே எமக்கு நோக்கமாக இருக்க வேண்டும். இதுவே ஒரு சிறந்த அரசியல்வாதிக்குரிய குணாதிசயமாகும்.

இன்று அரச வேலைவாய்ப்பு விடயங்களில் எமது தமிழ் சமூகம் புறக்கணிக்கப்பட்டுள்ளமை நாம் அறிந்த விடயமாகும். இத்தருணத்தில் இப்படியான பொது வேலைவாய்ப்பு விடயங்களில் எமக்குள் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வோமேயானால் எமது சமூகத்தின் வளர்ச்சி பாதிக்கப்படும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2010ஆம் ஆண்டுக்கு முன்பு பட்டதாரிகளாக சித்தியடைந்தவர்களின் விபரங்களை வழங்கினால் அரசாங்க வேலைவாய்ப்பினை பெற்றுக் கொடுக்க முடியும்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X