2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

சாகும்வரையான உண்ணாவிரதப் போராட்டத்தில் மீனவர்கள்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 18 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட். ஷாஜஹான்


அரசாங்கம் வாக்குறுதியளித்தபடி கடந்த 13 மாதங்களாக வழங்காதுள்ள  மண்ணெண்ணெய் மானியத்தை தொடர்ந்து வழங்குமாறும் இதுவரை வழங்காதுள்ள நிலுவைத்தொகையை வழங்குமாறும் கோரி  சிறு மீன்பிடித்துறை மீனவர்கள்; கடந்த திங்கட்கிழமையிலிருந்து  மேற்கொண்டுவந்த சத்தியாக்கிரகப் போராட்டத்தை  முடிவுக்கு கொண்டுவந்து,  சாகும்வரையான  உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று புதன்கிழமை ஆரம்பித்துள்ளனர்.

நீர்கொழும்பு மாநகரசபை முன்றலில் இடம்பெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக மீனவர்கள் பலர்  மாநகரசபை முன்றலில் ஒன்றுகூடியுள்ளனர்.

இந்நிலையில், கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால்  மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வந்து அங்குள்ள  மீனவர்களையும் மீனவர் சங்கப் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால்  மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவிக்கையில்,

'மீனவர்களின் பிரச்சினை எனக்கு நன்கு புரிகிறது. ஜனாதிபதி முன்னர் வாக்குறுதியளித்தபடி மீனவர்களுக்கு மண்ணெண்ணெய் மானியம் சில மாத காலம் வழங்கப்பட்டது. பின்னர் அது நிறுத்தப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு 13 மாதங்களாக மண்ணெண்ணெய் மானியம் வழங்கப்படாதுள்ளது.

மானியத் தொகைக்கு பதிலாக  மீன்பிடி உபகரணங்களை வழங்குதல் போன்று மாற்றுத் தீர்வுகளை முன்வைத்திருப்பது பிழையானதாகும்;. எரிபொருட்களின் விலை கடந்த காலங்களில் அதிகரித்துள்ளது. மண்ணெண்ணெய் விலையும் அதிகரித்துள்ளது.  இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலையேற்பட்டுள்ளது. மீனவர்களை தரையில் வைத்துக்கொண்டு கடலுக்கு தொழிலுக்கு அனுப்ப முடியாது.
விவசாயிகளுக்கு அரசு உர மானியம் வழங்குகிறது. மீன் தேவையை நிறைவு  செய்யும் மீனவர்களுக்கு எரிபொருள் மானியம் வழங்கப்படாதுள்ளது. அரசு ஒரு பக்கச்சார்பாக நடந்துகொள்கிறது. இந்த விடயம் தொடர்பில் எனக்கு தீர்மானம் எடுக்க முடியாது.

ஜனாதிபதியும் அரசாங்கமும் இது தொடர்பாக தீர்மானம் ஒன்றை எடுக்க வேண்டும். நான் ஜனாதிபதியுடன் உங்கள் பிரச்சினை தொடர்பாக உரையாட உள்ளேன்.

அரசாங்கம் வரவு - செலவுத்திட்ட ஒதுக்கீட்டின்போது விவசாயிகளுக்கு உர மானியம் வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்வது போன்று, மீனவர்களுக்கும் எரிபொருள் மானியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். நான் சமயத் தலைவர் என்பதால் எனக்கு வேண்டுகோள் விடுக்க மட்டுமே முடியும்' என்றார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X