2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

8000 வாக்குகளும் எம் கொள்கைக்கு கிடைத்த 80000 பொற்காசுகள்: மனோ

Kogilavani   / 2014 ஜூன் 13 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனோ கணேசன்

'வத்தளை, நீர்கொழும்பு, ஜாஎல, கந்தானை, களனி உள்ளடங்கிய கம்பஹா மாவட்டத்தில்  எமது ஏணி சின்னத்துக்கு கிடைத்த எட்டாயிரம் வாக்குகளும், எம் கொள்கைக்கு கிடைத்த எண்பதாயிரம் பொற்காசுகள்' என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

'இந்த வாக்கு தொகையை பெற நாம் கோடிகளில் பணம் செலவழித்து, பொருட்களை கொடுத்து அரசியல் செய்யவில்லை. அரசு அதிகாரத்தை பயன்படுத்தவில்லை. பெரும்பான்மை கட்சிகளைத்தான் ஆதரிக்க வேண்டும் என்று தமிழ் மக்களை மிரட்டவில்லை. ஆகவே இந்த பின்னணியில் எமக்கு கிடைத்த சுமார் எட்டாயிரம் வாக்குகள் மகத்தானவை. இதை அடித்தளமாக கொண்டு நமது கட்சி கம்பஹா மாவட்டத்தில் முன்நகரும்' எனவும் அவர் தெரிவித்தார்.  

ஜனநாயக மக்கள் முன்னணியின் கம்பஹா மாவட்ட மக்கள் சந்திப்பு  வியாழக்கிழமை (12) வத்தளை அல்விஸ் நகரில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'1999ஆம் ஆண்டு 3,200 வாக்குகளுடன் கொழும்பில் நான் அரசியலுக்கு வந்தபோது சிலர் சிரித்தார்கள். அப்படி சிரித்து எனக்கு சவால் விட்ட பெரிய மனிதர்களின் கட்சிகள், இன்று கொழும்பில் காணாமல் போய்விட்டன.

தமிழர்களின் வாக்குகளை சுவைத்து மகிழ்ந்து வரும் சில பெரும்பான்மை கட்சிகள், தமிழ் வாக்குகளை மனோ கணேசன் கொண்டு சென்றுவிட்டார் என்று கூறி இன்று அழுகின்றன.

கொழும்பு மாவட்டத்தில் எமது கட்சியின் மூலமாக மாத்திரமே தமிழ் பிரதிநிதித்துவம் கிடைக்கப்பட முடியும் என்ற நிலைமை இன்று ஏற்பட்டு விட்டது. 

கம்பஹா மாவட்டத்திலும் அந்நிலைமையை நாம் விரைவாக உருவாக்கி வருகிறோம். நாடாளுமன்றம், மாகாணசபை, மாநகரசபை, நகரசபை, பிரதேச சபை என்ற எந்தவொரு மக்கள் பிரதிநிதிகள் சபையிலும், மேல்மாகாணத்தில், ஜனநாயக மக்கள் முன்னணி வேட்பாளர்களோ தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்ய வேண்டும் என நான் திட்டம்போட்டு வேலை செய்கிறேன்.

ஆகவே எதிர்வரும் காலங்களில்  கொழும்பு, கம்பாஹா மாவட்டத்தின் எந்த ஒரு தேர்தலிலும் நாம் போட்டியிடுவோம். நாம் பெரும்பான்மை கட்சிகளுடன் கூட்டு சேர்ந்தும் போட்டியிடுவோம். தனித்தும் போட்டியிடுவோம். இவை அவ்வந்த தேர்தல் காலங்களில் தேவைக்கு ஏற்ப தீர்மானிக்கப்படும்.

நாம் பெரும்பான்மை கட்சிகளுக்கு எதிரிகள் இல்லை. எல்லா பெரும்பான்மை கட்சி தலைவர்களுடனும் எனக்கு புரிந்துணர்வு இருகின்றது. கீழ்மட்டங்களில் இருக்கும் சில்லறைகளை நாம் கவனத்தில் எடுப்பது இல்லை. சில பெரும்பான்மை கட்சிகளில் இருக்கும் சில தமிழர்களும் என்னிடம் நட்புடன் உரையாடியுள்ளனர். எவருக்கும் எங்கள் ஆதரவு தேவையென்றால் நாம் ஒத்துழைப்பு வழங்குவோம். ஆனால், எம்மை மதிக்காதவர்களை நாம் மதிக்க முடியாது.

ஆளும் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெறாத  தம்பி விஜயகுமாருக்கு மாகாணசபையில் போனஸ் ஆசனம் கட்டாயம் தரப்பட்டிருக்க வேண்டும். அப்படியானால்  நான் நிச்சயம் மகிழ்ச்சியடைந்திருப்பேன்.  ஆனால், அது நடக்கவில்லை. இது எனக்கு முன்கூட்டியே தெரியும்.

தமிழர்களின் வாக்குகள், தமிழ் வேட்பாளர்களின் பணம், உழைப்பு ஆகிய அனைத்தையும் பெரும்பான்மை கட்சிகள் பயன்படுத்தி கொள்கின்றன என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்.

ஐக்கிய தேசிய கட்சிக்கு போனஸ் ஆசனம் தரமுடியாது. மாகாணசபையில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும்  கட்சிக்கு மட்டுமே போனஸ் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஒருவேளை ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்று இருந்தாலும் கூட தமிழருக்கு போனஸ் ஆசனம் தரமாட்டார்கள்.

எந்த ஒரு பெரும்பான்மை கட்சியும் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை தங்கள் இனத்தவருக்கே கொடுத்து விடுவார்கள்.  கம்பஹா மாவட்ட பெரும்பான்மை சிங்கள அரசியல்வாதிகளின் கைக்கூலிகளாக இருக்கும் ஒருசில தமிழருக்குகூட அது  ஒருபோதும் கிடைக்காது.  அதை தருவோம், இதை தருவோம் என பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றுவார்கள். இந்த கைக்கூலிகளும் இதை நம்பிக்கொண்டு காலத்தை ஓட்டுவார்கள்.  ஆனால், கடைசியில் கிடைப்பது பூஜ்யமே.

கடந்த மாகாணசபை தேர்தலில் கம்பஹா மாவட்ட தமிழ் வாக்களிப்பை நாம் ஆய்வு செய்துள்ளோம். ஆளும் கட்சி தமிழ் வேட்பாளருக்கு வழங்கப்பட்ட வாக்குகளில் சுமார் 12,000 வாக்குகள், தமிழ் வாக்குகளாகும். ஐக்கிய தேசிய கட்சிக்கும் சுமார் 3,000 தமிழ் வாக்குகள் விழுந்துள்ளன.

இந்த சுமார் 15,000 தமிழ் வாக்குகள், வீணடிக்கப்பட்ட தமிழ் வாக்குகள் ஆகும். இந்த வாக்குகளுடன் எமக்கு வழங்கப்பட்ட 8,000 வாக்குகளும் சேர்த்தால் மொத்தம் 23,000 தமிழ் வாக்குகளாகும்.  இன்று கம்பஹா மாவட்டத்துக்கு என்று ஒரு தமிழ் பிரதிநிதி மாகாணசபையில் இல்லை. 23,000 தமிழர்கள் வாக்களித்தும் நமக்கு ஒரு பிரதிநிதி கிடையாது. ஆனால், 17,296 முஸ்லிம்கள், தங்கள் சொந்த சின்னத்துக்கு வாக்களித்து முஸ்லிம் காங்கிரஸ் மூலமாக ஒரு ஆசனத்தை பெற்றுள்ளார்கள்.

எங்கள் சொந்த கட்சியான, ஜனநாயக மக்கள் முன்னணியை நாம் பலப்படுத்தி, எங்கள் சொந்த இனத்து வாக்குகளை அணித்திரட்டினால்தான், நாம் ஒரு இனமாக இந்த மாவட்டத்தில் வாழ முடியும். இதுதான் எங்களுக்கு கிடைத்துள்ள பாடம்.  அவர் கோபிப்பார், இவர் விரும்ப மாட்டார் என்று எங்கள் இன உரிமைகளை கேட்க நாம் பின்வாங்க கூடாது.

அதேபோல் சிங்கள சகோதரர்களுடன் சேர்ந்து வாழவும் நாம் பின்வாங்ககூடாது. ஊடகங்கள் மூலமாகவும், மேடை போட்டும்  இன்று சிங்கள மக்கள் மத்தியில் சென்று ஒவ்வொரு நாளும் பேசும் தமிழ் அரசியல்வாதிகளில் நான்தான் முன்னணியில் இருக்கின்றேன்.  இதனால் இன்று சிங்கள மக்கள் எங்கள் கட்சியை நன்கு புரிந்து கொண்டு வருகிறார்கள்' என அவர் மேலும் தெரிவித்தார்.         

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X