2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கத் திட்டம்

Princiya Dixci   / 2016 ஜூன் 01 , மு.ப. 03:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு நிர்க்கதியாகியுள்ள நிரந்தர வீடற்ற குடும்பங்களுக்கு, வீடு வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை, சிறுநீரக நோய்த்தடுப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 

சிறுநீரக நோய்த்தடுப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாக ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் திங்கட்கிழமை (30) பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே இதுபற்றி கவனம் செலுத்தப்பட்டது. 

முழு நாட்டுக்கும் சவாலாக மாறியுள்ள சிறுநீரக நோய்த் தடுப்புக்காக, அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டத்தை தேசிய ரீதியான ஒரு தேவைப்பாடாகக் கருதி அதற்கு செயல் ரீதியாகப் பங்களிப்புச் செய்தல், சகல அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் பொறுப்பாகுமென இதன்போது ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்கள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் சமூகத்தின் நன்மை கருதி பல்வேறு நலன்புரி நிகழ்ச்சித் திட்டங்கள் சிறுநீரக நோய்த் தடுப்பு தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. அவர்களை ஊக்குவித்து வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.  

தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களில் குறைந்த வருமானம் பெறும் நோயாளர்களின் வாழ்க்கைக்குத் தேவையான உதவிகளை வழங்குதல், சிறுநீரக நோய் காரணமாகப் பெற்றோரை இழந்த உயர்தரம் கற்கும் பாடசாலை மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சித் திட்டங்கள் இதில் உள்ளடங்குவதுடன் அவற்றின் முன்னேற்றம் பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

மேலும், சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளர்களின் இரத்தச் சுத்திகரிப்புக்குச் செலவாகும் அதிகத் தொகையை ஈடுசெய்ய முடியாததன் காரணமாக அம்மக்கள் மிகவும் நெருக்கடியான நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன், இதுபற்றி விசேட கவனம் செலுத்தி அவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாகவும்  கலந்துரையாடப்பட்டது. 

சிறுநீரக நோய் பரவியுள்ள பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்குவதற்கு நடைமுறைப்படுத்தப்படும் நிகழ்ச்சித் திட்டம் பற்றியும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டதுடன், இந்நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துமாறு ஜனாதிபதி, நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் சபைக்கு ஆலோசனை வழங்கினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X