Princiya Dixci / 2016 மே 11 , மு.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையில் நீண்டகால தேவையாகவுள்ள தாதியர் பட்டப்படிப்பு பீடமொன்றை நிறுவுவதற்கு தேவையான உடனடி நிதியுதவிகளை, அரசாங்கம் வழங்கத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அரச தாதி அலுவலர்கள் சங்கத்தின் உறுப்பினர்களை, நேற்று செவ்வாய்க்கிழமை (10) ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
நாளை 12ஆம் திகதி கொண்டாடப்படும் சர்வதேச தாதியர் தினத்தினை நோக்காக்கொண்டு இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அரச தாதி அலுவலர்கள் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய உள்ளிட்ட தாதியர் சங்கத்தின் பிரதிநிதிகள் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.
புதிய தாதியர் பட்டப்படிப்பு பீடமொன்றை நிறுவுதல், பொதுச் சுகாதாரத் துறையில் காணப்படும் தாதியர் வெற்றிடங்கள் மற்றும் அவ்வெற்றிடங்களுக்கு தாதியர்களை இணைத்துக் கொள்ளல் தொடர்பில் இங்கு கலந்துரையாடப்பட்டது.
கொழுப்புப் பல்கலைக்கழகத்துடன் இணைந்ததாக தாதியர் பட்டப்படிப்பு பீடமொன்றை உருவாக்குதல் தொடர்பாக ஏற்கெனவே முன்மொழியப்பட்டிருப்பதுடன், அதற்காக 2016 ஆண்டு வரவு -செலவுத்திட்டத்தில் 2,500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சுகாதார சேவையினை வலுவானதாகவும் தரமானதாகவும் இலங்கையில் முன்கொண்டு செல்வதற்கு தன்னால் முடியுமான எல்லா வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்குவதற்குத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் 40,000 தாதிகளுக்கான தேவை இருக்கின்ற போதிலும் தற்போது 31,000 தாதியினர் மட்டுமே பணிபுரிவதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டின் தேவைக்கேற்ப திறமையான தாதியினரை பணியிலமர்த்துவது பாரிய பிரச்சினையாகவுள்ள அதேவேளை, தேசிய ரீதியில் காணப்படும் தாதியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான வேலைத்திட்டமொன்றின் அவசியம் தொடர்பாகவும் இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டினார்.
தொழிலாளர் சங்கங்கள், தமது கோரிக்கைகளை முன்வைக்கும்போது தொழில் தேவைகளை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டே கோரிக்கைகளை முன்வைப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, எதிர்காலத்தில் தொழிலாளர் சங்கங்கள் தமது கோரிக்கைகளை முன்வைக்கும்போது தேசிய இலக்குகளை அடைவதற்குரிய புதிய எண்ணக்கருக்கள் மற்றும் முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதன் முக்கியத்துவம் தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
சுகாதாரம் போசாக்கு மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன, கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பாலித மஹிபால உள்ளிட்ட பலர் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.
43 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
2 hours ago
2 hours ago