2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

தீவகம் 25 வருடங்களாக ஒரு சிலரிடம் அடிமைப்பட்டு இருந்தது: விந்தன்

George   / 2014 செப்டெம்பர் 22 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


யாழ். தீவுப்பகுதி என்பது கடந்த 25 வருடங்களுக்கு மேலாக ஒரு குறிப்பிட்ட சிலரின் ஆட்சி அதிகாரத்தின் (ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்) கீழ் அடிமைப்பட்டு இருந்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார்.

ஊர்காவற்துறை தம்பாட்டி காந்திஜி சனசமூக நிலையத்தின் 65ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு காந்திஜி விளையாட்டு கழகமும் காந்திஜி சனசமூக நிலையமும் இணைந்து நடத்திய விளையாட்டு போட்டி நிகழ்வுகள் ஞாயிற்றுக்கிழமை (21) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே விந்தன் மேற்கண்டவாறு கூறினார். விந்தன் தொடர்ந்து கூறுகையில்,

அடிமைப்பட்டு இருந்த காலப்பகுதியில் தீவகத்தில் விளையாட்டுத்துறை என்பது மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்திருக்கின்றது. அதுமட்டுமல்ல கல்வி வளர்ச்சி பிரதேச அபிவிருத்தி என்பனவற்றிலும் பின்தங்கி வந்திருக்கின்றது. இங்குள்ள மக்களின் பாதுகாப்பும் கேள்விக்குறியாய் இருந்தது. இவைகள் ஏன் ஏற்பட்டது என்பதற்கு எங்களால் பல காரணங்கள் கூறமுடியும்.

தீவக மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கைக்கு ஏற்றவாறு தீவக பிரதேசத்திற்கு நாங்கள் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களையும் பிரதேச நலத்திட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றோம்.

இதற்கு அரசதரப்பும் அரச ஆதரவு குழுக்களும் எமக்கு பல்வேறு விதத்திலும் நெருக்கடிகளையும் துன்பங்களையும் விளைவித்து வருகின்றன.
மத்திய அரசால் இந்த வருடத்திற்கான வடமாகாணசபைக்கான நிதியாக 5831 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிதி மூலதன செலவுக்கும் மீண்டுவரும் செலவீனத்திற்குமானதாகும்.

இந்நிதியை மத்திய அரசு ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்தோ அல்லது உலக வங்கி அல்லது சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்தோ உதவியாக அல்லது கடனாக பெற்றிருக்கலாம்.

அல்லது மத்திய திறைசேரியில் இருந்த மக்களின் வரிப்பணமாகவும் இருந்திருக்கலாம். மாகாணத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியான 5831 மில்லியனி;லிருந்து மாகாண சபையை பொறுப்பேற்றுள்ள மக்கள் பிரதிநிதியாகிய எமக்கு வழங்கப்பட்ட நிதி 1876 மில்லியன் ரூபாய்.
மிகுதி 3955 மில்லியன் ரூபாவை வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி தம்வசம் வைத்துள்ளார்.

ஆளுநர் மத்திய அரசின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப இந்நிதியினை பயன்படுத்துகின்றார். 30 வருடம் போரை சந்தித்த மாகாணம். பெரும் உயிர் சேதங்களையும் பெரும் உடமை இழப்புகளையும் சந்தித்த மக்களுக்கும் பிரதேசத்திற்கும் இந்நிதி யானைப்பசிக்கு சோளப்பொரி போன்றது.
இந்த நிலையில் அரசாங்கம் வடக்கு மாகாணத்திற்குதான் அதிக நிதி ஒதுக்கியதாக பெரும் பிரசாரத்தை முன்னெடுத்து வருகின்றது.

முதலமைச்சருக்கான நிதி நியதிச்சட்டம் வடக்கிலும் அமுல்படுத்தப்பட்டால் புலம்பெயர் வாழ் உறவுகள் உள்ளுர் நலன்விரும்பிகள் தொண்டு நிறுவனங்கள் இன்னும் பல நாடுகளும் எமக்கு நிதி வழங்க முன்வந்திருக்கும்.

இந்நிதியூடாகவும் எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்து மக்களுக்கும் உதவியிருக்க முடியும். இன்று இவற்றுக்கு தடைவிதித்தவர்களே எம்மைப்பார்த்து ஒரு வருடத்தில் என்ன செய்தீர்கள் என்று கேள்வி எழுப்புகின்றனர். கேள்வி எழுப்பும் இத்தகையோரை மக்கள் நன்கு அறிவார்கள் புரிவார்கள்.

தீவகத்தில் கூட்டமைப்பினராகிய எம்மை ஏதாவதொரு பொது நிகழ்வுகளுக்கு இங்குள்ளவர்கள் அழைத்தால் உடனே ஒரு கும்பல் சென்று, அவர்களை நோக்கி யாரைக்கேட்டு அழைத்தீர்கள் இவர்களை எல்லாம் நீங்கள் அழைக்கக்கூடாது எல்லா நிகழ்வுகளுக்கும் எங்களைத்தான் அழைக்க வேண்டும் என கடுந்தொனியில் எச்சரிக்கின்றார்கள்.

இவர்களின் இத்தகைய செயல் ஜனநாயக மரபுகளை மீறும் செயல் மட்டுமல்ல அரசியல் பண்பும் நாகரீகமும் தெரியாதவர் மேற்கொள்ளும் செயலாகும் என அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .