2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

யுத்தத்தில் பலியானவர்களின் உயிர்களை மாத்திரம் எம்மால் திருப்பிக் கொடுக்க முடியாது: அமைச்சர் சந்திரசி

Suganthini Ratnam   / 2011 மே 29 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

கடந்தகால யுத்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடைய வாழ்வியலை கட்டியெழுப்புவது மிகப்பெரிய சவாலாகும். அதை நாம் வெற்றிகரமாக நிறைவேற்றுவோம். அவர்கள் இழந்த சொத்துக்களை மிக விரைவில் வழங்குவதற்கு எமது அரசாங்கம் நடவடிக்கை எடுத்துக்கொண்டிருக்கிறதென  புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்தார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இலகு கடன் மற்றும் சுயதொழில் நிதி வழங்கும் நிகழ்வு  யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே   அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது 1000 பேருக்கு இலகு கடன் திட்டமாக காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டன.  

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

யுத்தத்தில் பலியானவர்களின் உயிர்களை மாத்திரம் எம்மால் திருப்பிக் கொடுக்க முடியாதுள்ளது. இருப்பினும் அவர்களது உடமைகளுக்கான நஷ்டஈடு மற்றும் கடன் உதவிகளை நாம் வழங்கி வருகிறோம்.

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையிலும் யுத்தத்திற்கு பின்னரான அபிவிருத்தியென்பது மிகவும் கடினமானதொன்றாகும்.

முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கான உதவித் திட்டங்களை எங்களது அரசாங்கம் வழங்கி வருகின்றது. புனர்வாழ்வு நிலையங்களிலுள்ளவர்களை பராமரிப்பதற்கென மாதாந்தம் 100 மில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிடுகிறது. முன்னாள் போராளிகளுக்காக அவர்களின் எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்காக எமது அமைச்சு பல திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.

யாழ்ப்பாணத்தில் என்றுமில்லாதவாறு பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவது  உலகம் அறிந்த உண்மை என்றார்.  

புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் செயலாளர் திஸநாயக, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, ஈ.பி.டி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி, யாழ். அரசாங்க  அதிபர் இமெல்டா சுகுமார், புனர்வாழ்வு உத்தியோகத்தர்கள், குடும்ப சகிதத்துடன் போராளிகளெனப் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இதேவேளை, எதிர்வரும் 6ஆம் திகதி கிளிநொச்சியில் 1000 பேருக்கு 2.5 மில்லியன் ரூபா இலகு கடன் வழங்கி வைக்கப்படவுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X