2025 மே 19, திங்கட்கிழமை

குகநாதன் மீதான தாக்குதலுக்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 16 , மு.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி,கிரிசன்)

உதயன் பத்திரிகையின் பிரதம செய்தி ஆசிரியர் ஞானசுந்தரம் குகநாதன் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ். பஸ் நிலையத்தில்  இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் கண்டன ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

ஐந்து ஊடக அமைப்புக்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ஊடகவியலாளர்கள் பலர் ஞானசுந்தரம் குகநாதன் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆக்ரோஷமாக கோஷங்களை எழுப்பினர்.

யாழ். பஸ் நிலையத்தில் ஒன்றுகூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள் ஊர்வலமாக யாழ். நகரைச் சுற்றி வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 சுதந்திர ஊடகவியலாளர் ஒன்றியம், உழைக்கும் பத்திரிகையாளர்கள் சங்கம், இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், முஸ்லிம் மீடியா போரம், ஊடக ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம் ஆகியவற்றைச் சேர்ந்த ஊடகவியலாளர்கள்  இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றினர்.

'யாழ். மண்ணில் ஊடக சுதந்திரத்தை பாதுகாப்போம்', 'கைதுசெய் கைதுசெய் குகநாதன்  மீது தாக்குதல்கள் நடத்தியவர்களை கைதுசெய்' 'குகநாதானுக்கு விழுந்த அடி உண்மைக்கு எதிரான பேரடி', 'ஊடகத்துறைக்கு எதிரான அடக்குமுறையை ஒழிப்போம்', 'ஊடக ஜனநாயக உரிமைகளை பாதுகாப்போம்', 'கண்டுபிடி கண்டுபிடி சூத்திரதாரிகளை கண்டுபிடி போன்ற கோஷங்களை எழுப்பியவாறும் வாசங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், எஸ்.சரவணபவன், ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட பலரும்  கலந்துகொண்டனர்.

உதயன் பத்திரிகையின் பிரதம செய்தி ஆசிரியரான ஞானசுந்தரம் குகநாதன் கடந்த ஜுலை மாதம் 29ஆம் திகதி இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • aj Tuesday, 16 August 2011 06:38 PM

    எதை செய்தாலும் நீதி மட்டும் எதிர்பார்க்க வேண்டாம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X