2025 மே 19, திங்கட்கிழமை

யாழில் துரிதப்படுத்தப்பட்டுள்ள டெங்குக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 06 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் டெங்குநோய்த் தாக்கம் அதிகரித்துள்ள நிலையிலும் கடந்த மாதத்தில் இரண்டு உயிரிழப்புக்கள்  ஏற்பட்டதையடுத்தும் இந்த வாரகாலம் விசேட டெங்குக் கட்டுப்பாட்டு வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.  அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

டெங்குக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் பதினொரு சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகளிலும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
நேற்று திங்கட்கிழமை  அனைத்து சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவுகள் தோறும் 83 கிராமங்களில் ஒலிபெருக்கி மூலமாக பிரசாரம் மேற்கொள்ளப்பட்டன. 64 இடங்களில் விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. 38 இடங்களில் சிரமதான நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. 92 டிராக்டர் லோட் கழிவுப் பொருட்கள் அகற்றப்பட்டுள்ளன. 3,268 வீடுகளும் 110 பாடசாலைகளும் 141 வர்த்தக நிலையங்களும் 94 அரச, அரசசார்பற்ற அலுவலகங்களும் 36 சந்தை வடிகால்களும் 81 வணக்கஸ்தலங்களும் 102 பராமரிப்பற்ற காணிகளும் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் 843 இடங்களில் டெங்குநுளம்புகள் பெருக்கமடையக்கூடிய இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.

கரவெட்டி, பருத்தித்துறை, சங்கானை, உடுவில், சண்டிலிப்பாய், யாழ். மாநகரசபைப் பகுதிகளில் 96 இடங்களில் எச்சரிக்கைக்கான சிவப்புநிற ஸ்ரிக்கர்கள் ஒட்டப்பட்டன. யாழ். மாநகரசபைப் பகுதியிலும் சண்டிலிப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் நவாலி, ஆனைக்கோட்டை, சுதுமலை, மானிப்பாய் ஆகிய இடங்களிலும் 23 பேருக்கு வழக்குத் தொடர்வதற்கான முன்னறிவித்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன.  

கண்டுபிடிக்கப்பட்ட டெங்குநோயாளர்கள் பெரும்பாலும் கொழும்பு சென்று வந்தவர்களாக உள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் டெங்குநோய் தீவிரமாகப் பரவி வருகின்றன. இதனால் அவசியமற்ற  கொழும்புப் பயணங்களை  தவிர்த்துக்கொள்ளுமாறும் பகல் வேளையில் நுளம்புக் கடியிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான உரிய வழிமுறைகளைப் பொதுமக்கள் பின்பற்றுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

06.09.2011 திகதி தொற்றுநோய் அறிக்கையின் பிரகாரம் யாழ். மாவட்டத்தில் நேற்றையதினம் 02 டெங்குநோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இறப்புகள் ஏற்படவில்லை. மழை ஆரம்பித்திருப்பதால் நுளம்புகள் பெருகுமிடங்கள் தொடர்பில் மக்கள் மிகுந்த அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனரென அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X