2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

பொலிஸ் காவலிலிருந்த இளைஞன் சடலமாக மீட்பு

A.P.Mathan   / 2011 நவம்பர் 27 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

அண்மையில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய நபரென்ற சந்தேகத்தில் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட இளைஞன் நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது...

கடந்த ஞாயிற்றுக்கிழமை உடுவில் பிரதேச செயலகத்திற்குட்பட்ட துன்னாலைக்கட்டுவானில் பாரிய நகைத்திருட்டு ஒன்று இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தோடு தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் ஐவரை பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.

கைதுசெய்த ஐவரில் சுமணன் (வயது 32) என்ற மனநலம் குன்றிய இளைஞனும் உள்ளடங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை பொலிஸார் கிளிநொச்சிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையிலேயே சுமணனின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

இச்சம்பவம் தொடர்பாக துன்னாலைக்கட்டுவான் பொலிஸார் கூறுகையில்...

'கொள்ளையடித்த பொருட்களை கிளிநொச்சி பிரதேசத்தில் மறைத்து வைத்திருப்பதாக ஆரம்பகட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் தெரிவித்தனர். அவர்களின் வாக்குமூலத்திற்கிணங்க கிளிநொச்சியில் மறைத்து வைத்துள்ள நகைகளை மீட்பதற்காக சந்தேக நபர்களை அழைத்துச் செல்லும்போதே சுமணன் தப்பி ஓடிவிட்டார். பொலிஸார் விரட்டிச் சென்றபோதிலும் அவரினை எங்களால் கைது செய்யமுடியவில்லை..' என்று தெரிவித்தனர்.

மரணமடைந்த சுமணன் அண்மைக்காலமாக மனநலம் பாதிக்கப்பட்டு திரிந்ததாக ஊரார் தெரிவிக்கின்றனர். 2007ஆம் ஆண்டு சுமணனின் அண்ணன் இனந்தெரியாத நபர்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மரணமாகியிருந்தார். அதன் பின்னர் இரண்டாவது அண்ணனும் வீட்டைவிட்டு ஓடிச்சென்றதால் அநாதரவான சுமணன் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்து மனநலம் பாதித்துவிட்டதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில்தான் சந்தேகத்தின்பேரில் சுமணனும் கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த இளைஞனின் மரணம் தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரிடம் தொடர்புகொண்டு தமிழ்மிரர் கேட்டபோது...

'கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை கிளிநொச்சியின் வட்டக்கச்சி பிரதேசத்தில் ஒழித்து வைத்திருப்பதாக சந்தேக நபர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஆகையினால் அந்நகைகளை மீட்பதற்காக சந்தேகநபர்களை அழைத்துச் செல்லும்போதே குறித்த நபர் தப்பிச் சென்றிருக்கிறார். அதன்பின்னர் அவர் சடலமாகவே மீட்கப்பட்டிருக்கிறார்.

மரணமடைந்த இளைஞர் மனநலம் குன்றியவரா என்பதுபற்றி தெரியவில்லை. இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. விசாரணைகள் முடிவடைந்ததும் இச்சம்பவம் தொடர்பான முழுமையாக தகவல்களை நாங்கள் ஊடகங்களுக்கு வழங்குவோம்...' என்று தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0

  • Riyash Sunday, 27 November 2011 05:51 PM

    இந்தியா மாதிரி நம்ம நாடும் மாற ஆரம்பிச்சுட்டுய்யா ?

    Reply : 0       0

    Pottuvilan Sunday, 27 November 2011 05:53 PM

    எல்லா போலீஸ் கைதிகளும் அவர்கள் வேறு ஒரு இடத்துக்கு அழைத்து செல்லும் போதுதான் மரணிக்கிறார்கள்? நல்ல போலீஸ் அப்பு .......

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .