2025 மே 20, செவ்வாய்க்கிழமை

செட்டிகுளம் மக்களை பார்வையிட அனுமதி மறுக்கப்பட்டது: சிறிதரன் எம்.பி.

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 15 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.கே.பிரசாத்)

வன்னியில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வவுனியா செட்டிகுளம் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள மக்களைப் பார்வையிடுவதற்காக நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 10 மணிக்கு தான்  சென்றபோது படையினரால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

யுத்தம் முடிந்து 3 வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும் இன்னமும் மீள்குடியேற்றப்படாது வவுனியா செட்டிகுளம் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மக்களைச் சந்திப்பதற்காக தான் சென்றதாகவும் இதன்போது தான் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மேலும் தெரிவிக்கையில்,

"வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்கள் மீள்குடியேற்றப்படாத நிலையில், சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். இந்த  மக்களைச் சந்திப்பதற்காக என்னுடன் வவுனியா நகரசபையின் உபதலைவர் ரதன்,  பாண்டியன்குளம் பிரதேசசபைத் தலைவர் ஆகியோர் வவுனியா செட்டிகுளம் நலன்புரி நிலையத்திற்கு  சென்றதாகவும் இதன்போது  செட்டிகுளம் நலன்புரி நிலையத்தில் உள்ள மக்களை எங்களைச் சந்திக்கவிடாது அங்கு  பொறுப்பாக உள்ள மேஜர் அபயசேகரவால் தடுத்துநிறுத்தப்பட்டோம்.

நான் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதி என்றும்   எனது மக்கள் படும் துன்பங்களை பார்வையிடுவதற்கு  எனக்கு உரிமை உள்ளது என்றும் நான் தெரிவித்தபோது,  ஜனாதிபதியும் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிதான். அவர் வருவதாக இருந்தாலும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் அனுமதி பெற்றே வரவேண்டும் எனக் கூறி திருப்பி அனுப்பப்பட்டோம்.  

செட்டிகுளத்தில் உள்ள ஆனந்தகுமாரசாமி, கதிர்காமர் நலன்புரி நிலையங்களில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட 2000 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படாதுள்ளனர்.  இதனால்  அங்கு வாழ்கின்ற மக்கள் உளவியல் தாக்கங்களுக்கு மத்தியில்  துன்பமான வாழ்க்கையை வாழ்ந்துவருகின்றனர். இன்னமும் கம்பிவேலிகாளால் அடைக்கப்பட்ட பிரதேசத்திற்கு உள்ளேயே எமது மக்கள் வாழ்ந்துவருகின்றனர். இந்த நிலையில் மக்களை பார்ப்பதற்கு இராணுவம் தடைவிதித்துள்ளமையானது எனது  சிறப்புரிமையை மீறும் செயல் ஆகும்.  இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கவுள்ளேன்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X