2025 மே 20, செவ்வாய்க்கிழமை

துன்புறுத்தல் கலாசாரத்திற்கு இனிவரும் காலங்களில் தமிழர்கள் இடமளிக்கமாட்டார்கள்: மனோகணேசன்

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 15 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத்)


தமிழ் அரசியல் கைதிகள் சிறைச்சாலைகளில் படுகொலை செய்யப்படுவது மற்றும் தமிழ் மக்களுக்கு எதிராக அரசாங்கம்  மேற்கொண்டுவருகின்ற துன்புறுத்தல் கலாசாரத்திற்கு தமிழர்கள்  இனிவரும் காலங்களில் இடமளிக்கமாட்டார்கள் என்பதை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு  யாழ். மண்ணில் இருந்து தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன் என ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் கூறினார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில்  இன்று புதன்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற  சம்பவமானது அரசாங்கத்தினால்  திட்டமிட்ட முறையில் நடத்தப்பட்ட ஒரு சம்பவம் ஆகும். இதற்காக நன்கு பயிற்சிபெற்ற அதிரடிப்படையினர் கொழும்பில் இருந்து வரவழைக்கப்பட்டு அரசியல் கைதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவங்களுக்காக அமெரிக்காவோ,  இந்தியாவோ, ஐரோப்பாவோ கண்ணீர் சிந்தப்போவதில்லை. நமக்காக நாமே கண்ணீர் சிந்தவேண்டியவர்காளாக உள்ளோம்.  இவ்வாறான சம்பவங்களுக்கு எதிராக நாங்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் மூலம் அமெரிக்கா, இந்தியா,  ஐரோப்பா ஆகிய  நாடுகள்  கண்ணீர் சிந்தும் அளவிற்கு  நிலமையை மாற்ற வேண்டும்' என்றார். 

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில்,

'சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகள் கொல்லப்படுவது காலம்காலமாக இடம்பெற்றுவருகின்றது. இலங்கை அரசாங்கத்தினால் இதுவரையில் சிறைச்சாலைகளில் 38 அரசியல் கைதிகள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இந்த கொலைகள் தொடர்பாக இதுவரையில் எந்தவிதமான விசாரணைகளும் இடம்பெறவில்லை.

சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டு இருக்கின்றவர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு சிறைச்சாலை அதிகாரிகளுக்கோ, இராணுவத்திற்கோ எந்தவிதமான அருகதையும் இல்லை என்பதை தெரிவிக்க விரும்புகின்றேன்.

வவுனியா சிறைச்சாலையில் இடம்பெற்ற தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான மருத்துவ வசதிகள், பராமரிப்பு வசதிகள்  போன்றவை செய்துகொடுக்கப்படவில்லை. இவ்வாறு செய்துகொடுக்கப்பட்டிருந்தால் இந்த இருவரையும் காப்பாற்றியிருக்கமுடியும். இந்த அரசாங்கம் மிகத் திட்டமிட்டு அவர்களை  சாகும்வரை விட்டிருக்கின்றது.

அத்துடன், 15 வருடங்களுக்கும் மேலாக பெண்கள் உட்பட பலர் எந்தவிதமான விசாரணைகளும் இன்றி தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள். விசாரணைகளைத் துரிதப்படுத்தி விடுதலை செய்யும்வரை நாட்டின் சகல இடங்களிலும் எமது போராட்டம் தொடரும்' என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X