2025 மே 20, செவ்வாய்க்கிழமை

'அரசியலுக்கு அப்பால் சென்று மக்களின் தேவைகளை நிவர்த்திசெய்ய தயாராகவுள்ளோம்'

Kogilavani   / 2012 ஓகஸ்ட் 17 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


'பின்தங்கிய பிரதேச மக்களின் மேம்பாட்டுக்காக நாம் அரசியலுக்கு அப்பால் சென்று மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்ய தயாராகவுள்ளோம்' என ஈ.பி.டி.பி நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.

கிளி.கிருஷ்ணபுரத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள பாலத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

'பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் துரித மீள்எழுச்சித்திட்டத்தின் மூலம் சுமார் 44 இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில்
அமையப்பெறவுள்ள இப்பாலத்தை அமைக்கும் பணி இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இப் பாலம் வரும் இருமாத காலத்திற்குள் கட்டி முடிக்கப்பட்டு மக்களின் போக்குவரத்திற்காக கையளிக்கப்படும். இவ்வாறான பின்தங்கிய பகுதிகளை மேம்படுத்தும் நோக்கில் எம்மால் மேற்கொள்ளப்பட்டு வரும் செயற்பாடுகளில் இக் கிருஸ்ணபுரம் கிராமத்தினையும் நாம் முன்னிலைப்படுத்தியுள்ளோம்.

கடந்த காலங்களில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் இடம்பெயர்ந்த மக்கள் இப்பகுதிகளில் குடியமர்த்தப்பட்ட போதிலும் இவர்களின் பொருளாதார மற்றும் வாழ்வியல் மேம்பாட்டில் எவரும் அக்கறைக் காட்டவில்லை.

இதன் காரணமாகவே இவ்வாறான பகுதிகள் தொடர்ந்தும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளன. எனவே இன்றுள்ள சாதகமான சூழலை பயன்படுத்தி எமது மக்களின் வாழ்வியலை மேம்படுத்தவும் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதிலும் நாம் முழுக்கவனத்தை செலுத்தியுள்ளோம்.

அதற்கமைவாக நாம்  இப்பகுதியில் மேலும் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் எண்ணியுள்ளோம். அதாவது விளையாட்டு மைதானத்தை புனரமைத்தல் மற்றும் ஆரம்ப பாடசாலையினை அமைத்தல் போன்ற செயற்பாடுகளை விரைவுபடுத்தவுள்ளோம்.

வரும் ஆண்டின் ஆரம்பத்தில் இங்கு பாடசாலை இயங்கக்கூடிய வகையில் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.  இதுபோன்று பின்தங்கிய பிரதேச மக்களின் மேம்பாட்டுக்காக நாம் அரசியலுக்கு அப்பால் சென்று மக்களின் தேவைகளை நிவர்த்திசெய்ய தயாராக உள்ளோம்' என அவர் மேலும் தெரிவித்தார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் துரித மீள்எச்சித்திட்டத்தின் மூலம் சுமார் 44 இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் அமைக்கப்பட்டு வரும் இப்பாலமானது கிருஸ்ணபுரம், மலையாள்புரம் தொடக்கம் அதைத்தொடர்ந்து வரும் பலபிரதேசங்களின் போக்குவரத்து மையப்பகுதியில் அமைந்திருப்பதுடன் மழைகாலங்களில் கிளிநொச்சி மாவட்டத்தின் குறித்த பிரதேசத்திற்கும் நகருக்குமான தரைவழித் தொடர்பை துண்டிக்கும் வகையில் பெருக்கெடுக்கும் ஆற்றுப்பகுதியாகவும் அமைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கரைச்சி பிரதேசசபையின் உறுப்பினர் கிருஸ்ணசாமி ஈ.பி.டி.பியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன், மீள்எழுச்சித் திட்ட பொறியியலாளர் கிசாந்த், கிராம சேவையாளர்களான சேந்தன், அம்பிகைபாலன், வைரமுத்து ஆகியோரும் கிளிநொச்சி சந்தை வர்த்தக சங்கத்தலைவர்  இரத்தினமணி மற்றும் கிராம அபிவிருத்தி சங்கத்தினர், பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X