2025 மே 20, செவ்வாய்க்கிழமை

வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய தலைமையகம் மீது கழிவு எண்ணெய் தாக்குதல்

Menaka Mookandi   / 2012 ஓகஸ்ட் 22 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.கே.பிரசாத், ரஜனி, பரமேஸ்வரன்,கிரிசன்)


சுன்னாகம், மருதனார்மடம் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் புதிய தலைமையகத்தின் மீது ஆயுதம் தாங்கிய குழுவினரால் கழிவு எண்ணெய் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன் 'த.தே.கூ வேண்டாம்' என குறித்த கட்டிடத்தில் கழிவு எண்ணெயினால் எழுதப்பட்டுள்ளது.

இன்று புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கயஸ் ரக வாகனத்திலும் மோட்டார் சைக்கிள்களிலும் வந்த ஆயுதம் தாங்கிய குழுவினர், அங்கு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த இருவரையும் ஆயுத முனையில் அச்சுறுத்தி, அலுவலகத்தின் பின்புறமாகவுள்ள பற்றைக்குள் தூக்கி வீசிட்டு இந்த தாக்குதலை நடத்தியதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

உள்ளூராட்சி உட்கட்டமைப்புக்களை மேம்படுத்தும் திட்டத்தின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை வங்கி ஆகியவற்றின் நிதியுதவியுடன் சுன்னாகம், மருதனார்மடம் பகுதியில் வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தலைமைக்காரியாலத்தில்; இன்று புதன்கிழமை சாந்தி செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.

இது தொடர்பாக வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் பிரகாஸ் தமிழ்மிரருக்கு தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி உட்கட்டமைப்புக்களை மேம்படுத்தும் முகமாக உள்ளூராட்சி மன்றத்தின் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தலைமை அலுவலகக் கட்டிடம் உள்ளூராட்சி மன்றத்திடம் இருந்து சில நாட்களுக்கு முன்னர் எம்மால் பொறுப்பேற்கப்பட்டு; அதற்குரிய சாந்தி செய்யும் செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம்.

இன்றைய தினம் குறித்த கட்டிடத்தில் பால் காச்சி படம் வைப்பதற்கான செயற்பாடுகள் நடைபெறவிருந்த நிலையில் அந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது என்றார்.

இன்று அதிகாலை 2 மணியளவில் இங்கு காவல் கடமையில் ஈடுபட்டிருந்தவர்கள் எனக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு இவ்வாறான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளதாக தெரிவித்தனர்.

அங்கு காவல் கடமையில் ஈடுபட்டிருந்தவர்களை ஆயுதமுனையில் அச்சறுத்தி அவர்களின் கைகளை கயிறுகளால் கட்டி அவர்களை அலுவலகத்தின் பின்புறத்தில் இருக்கின்ற பற்றைக்குள் தூக்கி வீசிவிட்டு கட்டிடத்தின் முன்பக்கம் முழுவதிலும் கழிவு எண்ணையை ஊற்றிவிட்டுச் சென்றிருக்கின்றார்கள் என்றார்.

நாங்கள் இன்று முன்னெடுக்க இருந்த செயற்பாடுகளை குழப்புகின்ற வகையில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. இருந்தாலும் திட்டமிட்டபடி எமது இன்றைய நிகழ்வுகள் நடைபெறும் என்று தெரிவித்தார்.

அத்துடன் இந்த இடத்திற்கு ஆயுதம் தாங்கிய குழுவினர் வந்து மேற்கொண்ட செயற்பாட்டினால் ஆயுதம் தாங்கியிருக்கின்ற இராணுவத்தினரையும், பொலிஸாரையும் மற்றும் ஏனைய ஆயுதம் தாங்கிய குழவினரையும் சந்தேகிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம் என்றார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக வலிகாமம் தெற்கு பிரதேச சபைத் தவிசாளர் பிரகாஸ் மேலும் தெரிவித்தார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X