2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்தியா உதவும்: சல்மான் குர்ஷித்

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 09 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத், சுமித்தி தங்கராசா

தமிழ் மக்களுக்குரிய பிரச்சினைகளை அரசாங்கத்துடன் பேசித் தீர்வு காண்பதற்கு இந்தியாவினால் முடிந்த எல்லா விதமான அனுசரணைகளையும் வழங்குவதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் உறுதியளித்துள்ளார்.

யாழ். ரில்ஹோ சிற்றி ஹோட்டலில் இந்திய வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு உறுதியளித்துள்ளார்.

யாழ். மாவட்டத்திற்கு முதல்த் தடவையாக வருகை தந்துள்ளதுடன், வடமாகாண சபைத் தேர்தலின் பின்னர் வருகை தந்திருப்பதும் மிக்க மகிழ்ச்சி அளிக்கின்றது. அந்த வகையில், இந்திய - இலங்கை உறவை வலுப்படுத்துவதற்கான முனைப்பாக இதை நான் கருதுகின்றேன்.

இந்திய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் 16 ஆயிரம் இந்திய வீட்டுத்திட்டத்தில் தற்போது 1,000 வீடுகள் பூர்த்தியடைந்துள்ளன. இந்த நிலையில்,  இரண்டாம் கட்டமாக 50 ஆயிரம் வீடுகளை நிர்மாணிப்பதற்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.  இந்தத் திட்டம்  2015ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் எனவும் அவர் கூறினார்.

யுத்தத்திற்குப்  பின்னர் யாழ்தேவி ரயில் சேவை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று முடிவு எடுத்ததன் பயனாக வடபகுதிக்கான  ரயில் பாதையும் இந்தியாவினால் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது எனவும் அவர் கூறினார்.

தசாப்தகாலமாக இடம்பெற்ற யுத்தத்தினால் ஏற்பட்ட கஷ்டங்கள், துன்பங்கள் நீங்கி வர்த்தகம், சுற்றுலா, பொருளாதாரம் ஆகியவற்றில் வடமாகாணம் வளர்ச்சி காணவேண்டும். எதிர்கால சந்ததியினர் பயன்படுத்தக்கூடிய வகையில் அபிவிருத்தி, வளர்ச்சி ஆகியவற்றில் கருத்தினைச் செலுத்தி அதற்காக உழைப்பதற்கும் தீர்மானிக்க வேண்டிய தருணம் இதுவாகும் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கூறினார். 

அண்மையில் பெற்றுள்ள வடமாகாண சபை அதிகாரத்தினைக் கொண்டு சரியான பயன்களை பெறுவீர்கள் என்று எதிர்பார்க்கின்றேன் எனவும் அவர் கூறினார்.

தற்போதைய இலங்கை விஜயத்தின்போது பல உடன்படிக்கைகளில் கைச்சாத்திடப்பட்டுள்ளதுடன், பேச்சுவார்த்தைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  அதில் சம்பூர் அனல்மின் நிலைய உடன்படிக்கையிலும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.  அனல்மின் நிலையத்தின் ஊடாக  கிழக்கு மாகாணத்திற்கு 500 வோல்ட் மின்சாரம் கிடைக்கும் என்றும் அதேநேரம், வடக்கிற்கும் அந்த மின்சாரம் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன எனவும் அவர் கூறினார். 

இந்தியா பத்து தொழில்நுட்ப செயற்றிட்ட முன்மொழிவை  செயற்படுத்த இருக்கின்றது. இவை அனைத்தும் இந்த நாட்டு மக்களிடையே நட்புறவு, நேசம், இணக்கம் புரிந்துணர்வை ஏற்படுத்த உதவும் என்பது எமது எதிர்பார்ப்பு. 

அடிக்கடி ஏற்படும் இரு நாட்டு மீனவர்களின் பிரச்சினைகளையும் தீர்க்கும் முகமாக இரு நாட்டு மீனவர்களையும் சந்தித்து தீர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

வெற்றிகரமாக வட மாகாண சபைத் தேர்தலை நடத்தி முடித்ததற்கான தனது பாராட்டுகளையும் மகிழ்ச்சியையும் தெரிவித்த அவர்,  அதேசமயம் 13ஆவது திருத்தத்தை ஆதரித்து நிற்பதோடு, தம்மை அர்ப்பணித்துள்ளதாகவும் கூறினார்.

அதன் கீழ் எவ்வாறான புரிந்துணர்வுகளும், இணக்கப்பாட்டினையும் செய்ய முடியுமோ அவற்றினை நிறைவேற்ற உங்களுடன் இணைந்து செயற்படுவோம் எனவும் இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .