2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மக்கள் நலனுக்காக மாகாணசபை எடுக்கும் தீர்மானங்களை ஆதரிப்போம்: கமலேந்திரன்

Menaka Mookandi   / 2013 ஒக்டோபர் 10 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா

'வடமாகாண மக்களின் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வர வேண்டும். மக்கள் நலனுக்காக மாகாணசபை எடுக்கும் தீர்மானங்களை ஆதரித்து சகல ஒத்துழைப்புக்களையும் வழங்க தயாராக உள்ளேன்' என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அமைப்பாளரும் வடமாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

'வடமாகாண முலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மாகாண சபை முறைமையை ஏற்று அரசுடன் இணைந்து செயற்படுவதற்கு முன்வந்திருக்கின்றார். இதன் மூலம், தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமைப் பிரச்சினைக்கான தீர்வை எட்ட முடியுமென ஏற்கனவே நாங்கள் கூறி வந்திருக்கின்றோம். இதனை தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் தற்போது ஏற்றுள்ளமை பாராட்டுக்குரிய விடயமாகும்.

அந்த வகையில், எதிர்கட்சி என்றவுடன் வெறுமனே எதிர்ப்புக் கட்சியாக இல்லாமல் எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் நான் சகல ஒத்துழைப்புக்களையும் வழங்குவேன்.

வடமாகாண சபை மக்களின் அடிப்படை வசதிகள் சார்ந்த பிரச்சினைகள், இந்திய கடற்றொழிலாளர்களால் அத்துமீறல்கள், விவசாயிகளின் பிரச்சினைகள், கணவர்மாரை இழந்த பெண்களுக்கான சுயதொழில் வாய்ப்புக்கள், பாடசாலைகள் அபிவிருத்தி செயற்பாடுகள், தொழில் வாய்ப்புக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இவற்றையெல்லாம் கருத்திற்கொண்டு முதலமைச்சர் தலைமையிலான மாகாண சபை நிர்வாகம் சிறப்பாக செயற்பட வேண்டும் என்ற கோரிக்கையை எமது மக்கள் சார்பாக முன்வைக்கின்றேன்' என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .