2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

வலி. வடக்கு மீள்குடியேற்ற பதிவை உறுத்திப்படுத்த வேண்டுகோள்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 13 , மு.ப. 07:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கே.பிரசாத்

வலிகாமம் வடக்கு பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து யாழ். மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் தற்போது வசித்துவரும் மக்கள் அனைவரும் தாங்கள் வசிக்கும் பிரதேச செயலகங்களூடாக ஏற்கெனவே பதிவு செய்த மீள்குடியேற்றப் பதிவுகளை 02 நாட்களுக்குள் உறுதிப்படுத்துமாறு வலி. வடக்கு இடம்பெயர்ந்தோர் மற்றும் புனர்வாழ்வுக்குழுத் தலைவர் ச.சஜீவன் வேண்டுகோள் விடுத்தார்.

இது தொடர்பில் அவர் புதன்கிழமை (12) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'வலி. வடக்கில் மீள்குடியேற்றப்படுகின்றவர்களின் எண்ணிக்கையை  குறைத்துக் காட்டுவதற்கான முயற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் இச்சூழ்நிலையில் தங்களது பதிவுகளை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். 

தற்போது பிரதேச செயலகங்களில் பதிவுகளை  உறுதிப்படுத்தும் வேலைகள் நடைபெறுகின்றன. மீள்குடியேற வேண்டியவர்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதற்கு சில அரசாங்க அதிகாரிகளும் உடந்தையாக செயற்படுவதால் இடம்பெயர்ந்த வலி. வடக்கு மக்களை விழிப்பாக செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றேன்' என்றார். 

வலி. வடக்கில் மீள்குடியேற விரும்புபவர்களை பதிவு செய்யுமாறு யாழ். மாவட்டச் செயலர் கேட்டுக்கொண்டதிற்கு இணங்க பிரதேச செயலகங்களினூடாக வலி.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் பதிவுகளை மேற்கொண்டனர்.

வலி. வடக்கைச் சேர்ந்த 9,968 குடும்பங்களைச் சேர்ந்த 34,368 பேர்  மீள்குடியேறுவதற்கான  பதிவுகளை இதுவரையில் மேற்கொண்டுள்ளனர்.
வலி.வடக்குப் பகுதிகளாக பலாலி,   கட்டுவன்,   மயிலிட்டி,  வசாவிளான்,   வளலாய்,   குரும்பசிட்டி,    காங்கேசன்துறை,   ஊறணி,   கீரிமலை,  மாவிட்டபுரம்,   கொல்லங்கலட்டி,   பணலியா,  வீமன்காமம்,   விலிசிட்டி,   பொற்கலன்தம்பை,    சேந்தான்குளம்  வலித்தூண்டல் உள்ளன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .