2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

காணியற்ற வலி. வடக்கு மக்களுக்கு விண்ணப்பங்கள் கையளிப்பு

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 30 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

வலி.வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து காணியற்று இருப்பவர்களுக்கு காணிகள் வழங்கும் பொருட்டு அவர்களுக்கான விண்ணப்பப் படிவங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (27) வழங்கப்பட்டன.

சுன்னாகத்திலுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற, வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கை எடுப்பது சம்பந்தமான கலந்துரையாடலின் போதே மேற்படி விண்ணப்பப் படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்போது உரையாற்றிய ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட இணைப்பாளர் கே.வி.குகேந்திரன், 'காணியற்றவர்கள் தொடர்பில் அவதானம் செலுத்திய பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, அவர்களுக்கு விண்ணப்பங்களை வழங்குமாறு கூறினார். அதற்கமைய இந்த விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன' என்றார். 

'இந்த விண்ணப்பங்களில் கிராம அலுவலரிடமிருந்து பின்பு பிரதேச செயலாளரிடமிருந்தும் கையொப்பங்களைப் பெற்றுக்கொள்ள முடியும். இவ்விண்ணப்பத்தினை முற்றுமுழுதாக காணியற்றவர்களுக்கே வழங்க வேண்டுமென அமைச்சர் வலியுறுத்தினார். வேறு இடத்தில் காணி, வீடுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டால் சட்ட சிக்கல்களை சந்திக்க நேரிடும்' என்றும் அவர் கூறினார்.

எங்களால் உடனடியாக அனைவருக்கும் காணி வழங்க முடியாது. கட்டம் கட்டமாகத்தான் வழங்க முடியும். ஆனால் காணியற்ற சகலருக்கும் காணி வழங்குவோம். தமிழீழம், தமிழ்த் தேசியம் என்று தூண்டி தீய அரசியல் சக்திகள் தவறாக வழிநடத்தும் வகையிலான கருத்தைக் கூற முடியும். எவ்வாறாயினும், பொறுமையாக இருங்கள்.

பதினேழாயிரத்து ஐந்நூறு மில்லியன் ரூபா நிதியினை மத்திய அரசு வடமாகாண சபைக்கு ஒதுக்கியுள்ளது. வடமாகாண சபையினர் கௌரவ பிரச்சினையால் வடமாகாண ஆளுநருடன் இணைந்து செயற்பட பின்னடிக்கின்றனர். இப்படியே சென்றால் மக்களுக்கு வந்த நிதி மீண்டும் திறைசேரிக்கே சென்றுவிடும். அவர்களுக்கு மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை பற்றி அக்கறையில்லை.

ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலுடன் முற்றுப்பெற்றுவிட்டது. இன்று எமது அமைச்சரின் இணக்க அரசியலே நடைமுறைக்கு சாத்தியமாயிற்று. இன்று சர்வதேசம், சர்வதேசம் என்கின்றனர். இதே சர்வதேசம் தான் எமது மக்களை முள்ளிவாய்க்கால் வரை கொண்டு சென்றது என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் வலிகாமம் அமைப்பாளரும், சங்கானை  பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவருமான சிவகுரு பாலகிருஸ்ணன், சுன்னாகம் அமைப்பாளர் திரு.வலண்டயன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .