2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அரசியல் கதைப்பதை அனுமதிக்க முடியாது: டக்ளஸ்

Kogilavani   / 2014 மே 27 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அரசியல் கதைப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது எனவும் இதனை மக்களது அபிவிருத்தி மேம்பாட்டுக்கான களமாக பயன்படுத்த வேண்டுமெனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தி உள்ளார்.

யாழ்.மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் மேற்படி கூட்டம் இணைத் தலைவர்களான அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் திங்கட்கிழமை (26) இடம்பெற்றது.

இதன்போது கடந்த கூட்டத்தில் ஆராயப்பட்ட விடயங்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளினது முன்னேற்றம் தொடர்பில் ஆராயப்பட்டது.

ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தின் போது, ஒருவருக்கொருவர் மதிப்பளிக்க வேண்டுமென மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் தவராசா சுட்டிக்காட்டியிருந்த போது, இக்கூற்று அவையோரால் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதன்போது, வலி.வடக்கு நகுலேஷ்வரம் பகுதியில் கடற்படையினரால் 186 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் சுவீகரிக்கப்படுவதாக அறிவிப்புச் சுலோகங்கள் ஒட்டப்பட்டுள்ளதாகவும், காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலைக்குச் சொந்தமான காணிகள் அங்குள்ள மக்களுக்கும் வேறு இடத்து மக்களுக்கும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினரால் பகிர்ந்தளிக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டப்பட்டது.

இதற்கு பதிலளித்த அமைச்சர், அப்பகுதி மக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் காணிகள் வழங்கப்படுவதாகவும் இவ்விடயத்தில் தவறிழைக்கும் பட்சத்தில் தமது கவனத்திற்குத் தெரியப்படுத்துமாறும் மக்களின் உணர்வு தொடர்பான விடயம் என்பதால், குறித்த விடயத்தில் ஆராய்ந்து நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், காணி உரிமையாளர்கள் இருக்கும் நிலையில் குறித்த காணிகளை வேறு யாருக்காவது பகிர்ந்தளிப்பது தொடர்பான நடவடிக்கைகளுக்குத் தாம் ஒருபோதும் அனுமதி வழங்கப் போவதில்லை என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, பாத்தீனியம் செடியை அழிப்பதற்குத் தாம் நிதியுதவி பெற்றுத் தருவதாகவும், அதற்கிடையில் மாகாண சபையின் நிதியைக் கொண்டு உடனடியாக அவ்வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கும் வகையில், மாகாண அமைச்சின் அமைச்சரவையில் தீர்மானிக்குமாறும் மாகாண அமைச்சர் ஐங்கரநேசனுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆலோசனை வழங்கினார்.

அத்துடன், கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு கேட்டுக் கொண்டமைக்கு அமைவாக, உவர்நீர்க் கலப்புக்கு அனுமதிக்க முடியாது எனவும், குறித்த திட்டம் தொடர்பில் தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு துறைசார்ந்தோரைக் கேட்டுக் கொண்ட அமைச்சர், அதுவிடயம் தொடர்பில் தாம் 29ம் திகதி நடைபெறவுள்ள அமைச்சரவையில் எடுத்துக் கொள்ள முடியும் என்றும், செம்மணி வயற்காணிகள் மண் கொண்டு நிரப்பப்படுவதை உடனடியாக பொலிஸாருக்குத் தெரியப்படுத்தி தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கையையையும் முன்னெடுத்திருந்தார்.

யாழ். மாவட்டத்தில் நிலவும் வரட்சி நிலையைக் கருத்திற் கொண்டு, மாகாண சபையும், மத்திய அரசும் இணைந்து செயற்திட்டமொன்றை முன்னெடுக்கும் வகையில் விஷேட நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற்றுத் தருவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார். 

அத்துடன், பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் நிலைமை தொடர்பில்  நேரில் சென்று பார்வையிட்டதாகவும், இது விடயம் தொடர்பாக தாம் அரசுடன் கலந்துரையாட இருப்பதாக தெரிவித்த அமைச்சர் , யாழ். பல்கலைக்கழகத்திற்காக கிளிநொச்சி வளாகம் எவ்வாறு பெற்றுக் கொள்ளப்பட்டதோ, அதேபோன்று கலாசாலையையும் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை தமக்குள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

வடமராட்சி கிழக்குப் பகுதியில் இடம்பெற்றுவரும் மணல் அகழ்வு விடயம் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்ட வேளை, சுற்றுச்சூழல் அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தரிடம் குறித்த விடயம் தொடர்பான அறிக்கையினைச் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

அத்துடன், யாழ். - கிளிநொச்சி நீர்வழங்கல் மற்றும் சுகாதாரத் திட்டம், சமூகமயப்படுத்தப்பட்ட கிராமிய நீர்வழங்கல், சுகாதாரத் திட்டம் தொடர்பிலும் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், குறித்த திட்டம் தாமதமடைவதற்கான காரணங்கள் குறித்து அமைச்சர் கேட்டறிந்து கொண்டதுடன், திட்டம் தாமதமடையும் பட்சத்தில் அதற்குரிய நிதி திரும்பும் அபாயம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .