2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

அரசாங்கம் சில சருகு புலிகளைப் புலிகளாக நடமாடவிட்டிருக்கிறது: ஐங்கரநேசன்

Kogilavani   / 2014 மே 29 , மு.ப. 03:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


விடுதலைப்புலிகளைத் தோற்கடித்த இலங்கை அரசாங்கம் இப்போது மீளவும் புலிகள் உயிர்பெறுவதாகச் சர்வதேசத்துக்குக் காட்ட முயற்சிக்கின்றது. இதற்காகத் தன்வசமுள்ள சில சருகு புலிகளைப் புலிகளாக நடமாடவிட்டு பலரைக் கைதுசெய்யும் நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது' என்று வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில், காணி சுவீகரிப்பிற்கு எதிரான கவனயீர்ப்புப் போராட்டமொன்று புதன்கிழமை (28) காலை கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்துக்கூறுகையில்,

'போர் முடிந்து ஐந்து வருடங்கள் கடந்துவிட்டன என்பது உண்மைதான். ஆனால், ஆயுத ரீதியாக இலங்கை அரசாங்கம் தமிழ் மக்கள் மீது தொடுத்த போர் முடிவுக்கு வந்துள்ளதே தவிர, தமிழ் மக்கள் மீதான ஆக்கிரமிப்புப் போர் இன்னமும் நின்றபாடில்லை. போர்க்காலத்தைவிட வேகமாகத் தமிழ் மக்களின் நிலங்கள் அரசால் ஆக்கிரமிக்கப்படுகின்றது.

எமது மக்களைப் பலவந்தமாக அவர்களின் சொந்த நிலங்களில் இருந்து விரட்டியடித்துவிட்டு அந்த இடங்களில் படையினர் முகாங்களை அமைத்து வருகின்றனர். இராணுவத்தை வெளியேற்றிவிட்டுத் தங்கள் சொந்த இடங்களிலேயே தங்களை மீள்குடியேற்ற வேண்டும் என்று எமது மக்கள் ஜனநாயக ரீதியாகப் போராடி வருகிறார்கள்.

படையினரின் பிரசன்னம் தொடர்ச்சியாகத் தேவை என்று உலக நாடுகளுக்குக் காட்டி, நிரந்தரமாகவே எமது பகுதிகளில் இராணுவத்தை நிலைநிறுத்துவதற்காக அரசாங்கம் புலிகள் மீளிணைகிறார்கள் என்று கதை புனைய ஆரம்பித்துள்ளது.

இதனை மேலும் சோடிப்பதற்காகப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தார்கள் என்று சொல்லிப் பலரைக் கைதுசெய்தும் வருகிறது. ஜனநாயக ரீதியாகப் போராட முற்படுபவர்களுக்கும் புலிச்சாயம் பூசி பொய்வழக்குப் போட்டுக் கைதுசெய்கிறது.

இராணுவம் எமது மக்களுக்குச் சொந்தமான நிலங்களில் இருந்து வெளியேறியே ஆகவேண்டும். அரசாங்கத்தின் முடிக்குரிய காணிகளாக இருந்தாலும்கூட, அங்கு படையினர் நிலைகொள்வது  பொதுமக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துமாக இருந்தால் அங்கிருந்தும் அவர்கள் வெளியேறுவதுதான் நீதியானது என்று எமது வடமாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெளிவுபடுத்தியிருக்கிறார்.

அரசு மேற்கொள்ளும் திட்டமிட்;ட நில அபகரிப்பை எப்பாடுபட்டாயினும் தடுத்தாக வேண்டும். இல்லாவிடில், தமிழ் மக்கள் தமது தாயகத்திலேயே சிறுபான்மையினராகி ஒட்டுமொத்த இலங்கைத் தீவும் சிங்கள பௌத்த பெருந்தேசிய இனத்துக்கு என்றாகிவிடும். எனவே இராணுவத்தின் திட்டமிட்ட நில அபகரிப்புக்கு  எதிராக எமது போராட்டத்தை மேலும் விரைவும் விரிவுபடுத்த வேண்டும். இதற்குக் கட்சி வேறுபாடு இல்லாமல் நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்' என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .