2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மிருகபலியை நிறுத்தக் கோரி உண்ணாவிரதப் போராட்டம்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 13 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


- நா.நவரத்தினராசா, ஐ.நேசமணி 


யாழ். மாவட்டத்திலுள்ள கோவில்களில்  மேற்கொள்ளப்படும் மிருகபலியை நிறுத்துமாறு கோரி, தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்கையம்மன் கோவிலுக்கு முன்பாகவுள்ள வீதியில் இன்று வெள்ளிக்கிழமை  காலையிலிருந்து உண்ணாவிரப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

அறவழி போராட்டக்குழுவின் அமைப்பாளர் மறவன்புலவு க.சச்சிதானந்தம்,  அறவழி போராட்டக்குழுத் தலைவர் ஸ்ரீ.சக்திவேல், அமைப்பின் செயலாளர் எஸ்.தங்கராசா, யாழ்ப்பாணம் சின்மயாமிஷன் சிவனேந்திரா சைத்தனிய சுவாமி, சிவன் மானிட மேம்பாட்டு நிறுவனத் தலைவரும் சைவ மகாசபைத் தலைவருமான க.கலியுகவரதன் ஆகியோர் இணைந்து இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

கீரிமலை, கவுணாவத்தை நரசிம்ம வைரவர் கோவிலில் வருடா வருடம் மேற்கொள்ளப்பட்டுவந்த வேள்வியை நிறுத்துமாறு  மதநம்பிக்கைகள் மற்றும் ஜீவகாருண்ய அடிப்படையில் மனிதநேயமுள்ள ஒருவர் மல்லாகம் நீதிமன்றத்தில் கடந்த திங்கட்கிழமை (09) வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜோய் மகிழ்மகாதேவா, இந்த வேள்வியை நடத்துவதற்கு சட்டக் கட்டுப்பாடுகள் விதித்து புதன்கிழமை (11) தீர்ப்பளித்தார்.

அதாவது வேள்வியை  நடத்த வேண்டுமானால், விலங்குகள் இறைச்சிக்காக வெட்டப்படும் கட்டளைச் சட்டத்தின் பிரிவு - 4 இல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, ஒரு விலங்கு வெட்டப்படும்போது மற்றைய விலங்கு பார்க்காத வகையிலும் விலங்குகள் வெட்டப்படும் இடத்தில் ஒருதுளி இரத்தம் சிந்தாத வகையிலும் இறைச்சிக்காக வெட்டப்படும் ஒவ்வொரு விலங்குக்கும்  பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களின் அனுமதி பெறப்பட்டும் வெட்டப்பட வேண்டும்

அத்துடன்,  மிருக வதைக்கு எதிரான சட்டத்தில் கூறப்பட்டுள்ள எந்தவொரு சரத்தும் மீறாத வகையில் நடக்க வேண்டும் போன்ற சட்டக் கட்டுப்பாடுகளை  விதித்தார்.

மேலும், இதனை இளவாலை பொலிஸார் கண்காணிக்குமாறும்  நீதவான் உத்தரவிட்டார்.

இந்நிலையில்,  வேள்வியை நடத்துவதற்கு வலி. வடக்கு (தெல்லிப்பழை) பிரதேச சபையிலிருந்து அனுமதி கிடைத்துள்ளது. இதற்கமைய, நாளை சனிக்கிழமை (14) தாங்கள் வேள்வியை  நடத்தவுள்ளதாகவும் நரசிம்ம வைரவர் ஆலய பரிபாலனசபைத் தலைவர் பொ.இராசேந்திரம் தெரிவித்தார்.


  Comments - 0

  • Shan Subramaniam Friday, 13 June 2014 11:03 AM

    கடவுளின் பெயரால் கோவில் வளாகங்ககளில் அநாகரிக செயலில் ஈடும்படும் இவர்கள், அவன் வெட்டினான் இவன் கொத்தினான் என கூச்சல் போடும் கூட்டத்தில் முன்னிற்பார்கள். இவர்களின் இந்த உயிர் பலி வேள்வியை நிறுத்தக் கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடும் அன்பர்களுக்கு வாழ்த்துக்கள்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .