2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

வளலாயில் காணிகள் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராட்டம்

Suganthini Ratnam   / 2014 ஜூன் 16 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த், செல்வநாயகம் கபிலன் 


யாழ்ப்பாண மாவட்டத்தின் வலி. கிழக்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வளலாய் பகுதியில் மக்களின் காணிகளை இராணுவம் ஆக்கிரமிப்பதற்கு எதிராக கண்டனப் போராட்டமொன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் கோப்பாய் பிரதேச செயலகம் (வலி. கிழக்கு) முன்பாக திங்கட்கிழமை (16) காலையிலிருந்து நடைபெற்று வருகின்றது.

வளலாய் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த  மக்களை அங்கு மீள்குடியேற்றக் கோரியும் அத்துடன், வளலாய்; பகுதியில் வலி. வடக்கு மக்களை குடியேற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இதன்போது, வலி. வடக்கில் மக்களின் காணிகளை இராணுவத்தினர் சுவீகரித்துக்கொண்டு, அப்பகுதியைச் சேர்ந்த நலன்புரி நிலையங்களில் வசிக்கும் மக்களை வளலாயில் குடியேற்றுவதற்காக இராணுவம் காணிகளை துப்பரவு செய்வதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

அவ்வாறு இல்லாமல், தங்களது  காணிகளில் தங்களை மீள்குடியமர்த்தும்படி கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினர்.

இந்தப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான  சுரேஸ் பிரேமச்சந்திரன், சிவஞானம் சிறிதரன், வடமாகாண கல்வி அமைச்சர் தம்பிராசா குருகுலராஜா, ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடகச் செயலாளரும் கொழும்பு மாநகரசபை உறுப்பினருமான சி.பாஸ்கரா, முற்போக்கு தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் சுதர்சிங் விஜயகாந்த், வடமாகாண சபை உறுப்பினர்கள்,  வளலாய்ப் பகுதியைச் சேர்ந்த மக்கள் ஆகியோர் எனப் பலர் கலந்துகொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .