2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'ஆயுதப் போராட்டம் தவறான வழியில் சென்றதால் இலக்கை அடைய முடியவில்லை'

Suganthini Ratnam   / 2014 ஜூலை 01 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}


தமிழர்களது ஆயுதப் போராட்ட வழிமுறைகள் தவறான நகர்வுகளை நோக்கிச் சென்றதன் காரணமாகத்தான், அதன் இலக்கை அடைய முடியாது போய்விட்டது என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் கே.வி.குகேந்திரன்  தெரிவித்தார்.

யாழ். நுணாவில் மேற்கு பகுதி மக்களின் வாழ்வாதாரத் தேவைகளுக்கான ஒழுங்குகளைச் செய்யும் பொருட்டு அப்பகுதி மக்களுடனான சந்திப்பு  நுணாவில் பொதுநோக்கு மண்டபத்தில் திங்கட்கிழமை (30) நஇபெற்றது. இங்கு  கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

'தனி மனிதனின்  அபிவிருத்தியிலிருந்துதான் ஒரு பிரதேசம்; வளர்ச்சியடைகின்றது. ஒவ்வொருவரினதும் பிரச்சினைகள், தேவைகள் பூரணப்படுத்தப்படும்போது அப்பகுதி தானாகவே அபிவிருத்தி மட்டத்தை அடையும்  என்பது இயற்கையின் நியதி. அந்த வகையில்தான், நாம் எமது செயற்பாடுகளை யதார்த்தமாக மேற்கொண்டு வருகின்றோம்.

கடந்த காலத்தில் எமது உறுப்பினர்களின் தொடர்ச்சியான இழப்புகளை கண்டும் மனம் தளராது மக்களாகிய உங்களுடன் இருந்து சேவைகளை செய்துவந்ததால் தான்;, இன்று நாம் வடபகுதியின் அபிவிருத்தியை நிர்ணயிக்கும் சக்தியாக வலம் வந்துகொண்டிருக்கின்றோம்.

ஈ.பி.டி.பி. யிடம் சென்றால் எதையும் பெற்றுக்கொள்ளலாம் என்ற நிலையில்தான் இன்றுவரை குடாநாட்டு மக்களின் மனதிலுள்ள உண்மை நிலை. கடந்த காலத்தில் நீங்கள் தவறானவர்களுக்கு கொடுத்த அரசியல் அங்கீகாரத்தை போல இனியொரு தடவை செய்துவிடக்கூடாது என்பது தான் எமது கோரிக்கை.

அவ்வாறானதொரு சந்தர்ப்பத்தை எமது கட்சியின் செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான எமக்கு நீங்கள் தந்திருந்தால் உங்களின் எதிர்பார்ப்பை விட அதிகமான அதிகாரத்துடன் கூடிய அபிவிருத்திகளையும் நிரந்தர அரசியல் தீர்வையும் பெற்றுத் தந்திருப்போம்.

கடந்தகால அரசியல் காய் நகர்த்தல்களுக்காக அமைக்கப்பட்ட மாயை நிறைந்த அமைப்புத்தான் இந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இந்த கூட்டமைப்புக்குள் தற்போது பதவி மோகம் என்ற மாயை தலை விரித்தாடுகின்றது. தங்களது  அரசியல் இருப்பை தக்கவைத்துக்கொள்ள அவர்கள் உங்களை மறுபடியும் ஏமாற்ற தயாராகிவிட்டனர்.

சாட்டுப்போக்குச் சொல்லி உள்ளூராட்சி சபைகளின் காலத்தை ஓட்டிக்கொண்டிருக்கும் போலித் தமிழ்த் தேசியவாதிகளுக்கு இன்னும் ஒரு வருடத்திற்கு உட்பட்ட காலம் தான் ஆட்சி அதிகாரம் உண்டு. இக்காலப் பகுதியில் தான் நீங்கள் தெளிவாக செயற்பட வேண்டும்.

இலங்கைத் தமிழர்கள் உலகெங்கும் தலைசிறந்த தகைமைகளுடைய புத்திஜீவிகளாக வலம் வருகின்றனர். பலதரப்பட்ட துல்லியமான தீர்மானங்களை எடுத்து வெற்றி கண்டு வருகின்றனர். ஆனால், இலங்கையில்  நடைபெறும் தேர்தல் காலத்தில் மட்டும் அந்த விவேகம் நிறைந்த தீர்மானங்களை தப்பாக செயற்படுத்துகின்றனர். இதனால் தான் எமது அரசியல் பிரச்சினைக்கு நீண்டகாலமாக தீர்வு காணமுடியாத ஓர் இனமாக இருக்கின்றோம்' என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .