2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

'சடலங்களை எரியூட்ட சிபாரிசு கடிதம் வேண்டும்'

Menaka Mookandi   / 2014 ஜூலை 22 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினைச் சேர்ந்த பெண் உறுப்பினரின் ஒருவரின் சிபாரிசுக் கடிதம் பெற்று வந்தால் மட்டுமே ஆசைப்பிள்ளையேற்றம் பகுதியிலுள்ள செம்பாட்டுச் சுடலையில் சடலங்களை எரியூட்டுவதற்கு இராணுவத்தினர் அனுமதியளிப்பதாக சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் இராசையா தெய்வேந்திரம்பிள்ளை இன்று செவ்வாய்க்கிழமை (22) தெரிவித்தார்.

யாழ்;., மிருசுவில், ஆசைப்பிள்ளையேற்றம் பகுதியில் 50 ஏக்கர் காணியினை இராணுவ முகாம் அமைப்பதற்காக நிலஅளவை செய்யவிருந்த நடவடிக்கை, போராட்டம் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது. அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

இந்த 50 ஏக்கர் காணிகளுக்குச் சொந்தமான இந்தப் பெண், 1967ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் 53 ஏக்கர் காணியினை வைத்திருந்தார். அதில் 3 ஏக்கர் காணியினை சுடலை அமைப்பதற்காக சாவகச்சேரி பிரதேச சபைக்கு வழங்கியிருந்தார்.

இதனையடுத்து, எழுதுமட்டுவாள் தெற்கு, எழுதுமட்டுவான் வடக்கு, கரம்பன், மற்றும் படித்த மகளிர் குடியேற்றத் திட்டம் ஆகிய பகுதிகளினைச் சேர்ந்த மக்கள் 3 ஏக்கர் காணியினையும் செம்பாட்டுச் சுடலையென்ற பெயரில் 1969ஆம் ஆண்டு முதல் சடலங்களை எரியூட்டி வந்தனர்.

இந்நிலையில், 2000ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தம் காரணமான இப்பகுதியினை விட்டு மக்கள் இடம்பெயர்ந்து சென்றனர். மீண்டும் மீளக்குடியமர வந்த போது, இப்பெண்ணின் 50 ஏக்கர் காணி மற்றும் சுடலைக் காணி ஆகியன இராணுவ முகாமாக்கப்பட்டு இருந்தன.

இந்நிலையில், மேற்படி சுடலையில் சடலத்தினை எரியூட்டுவதாயின் இந்தப் பிரதேசத்திலுள்ள ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் பெண் உறுப்பினர் ஒருவரின் சிபாரிசுக் கடிதம் பெறப்பட்டு வந்தால் மட்டுமே இராணுவத்தினர் சடலங்களை எரியூட்ட அனுமதிக்கின்றனர்.

அவ்வாறு இல்லாவிட்டால், இங்கிருந்து 5 கிலோ மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள சுடலையிலேயே சடலங்களை எரியூட்ட முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .