2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

காரைநகர் சிறுமியின் குடும்பத்திற்கு எந்தவிதமான உதவிகளும் இல்லை : சஜீவன்

George   / 2014 ஓகஸ்ட் 13 , மு.ப. 11:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

- பொ.சோபிகா, எஸ்.ஜெகநாதன்

யாழ். தீவகம், காரைநகர், ஊரிப் பகுதியில் கடற்படை வீரரால் துஷ்பிரயோகத்துக்குள்ளாக்கப்பட்ட சிறுமிக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எந்தவிதமாக உதவிகளும் கிடைக்கவில்லையென வலி. வடக்குப் பிரதேச சபையின் உபதலைவர் எஸ்.சஜீவன் புதன்கிழமை (13) தெரிவித்தார்.

யாழ். ஊடக அமையத்தில் புதன்கிழமை (13) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு சஜீவன் மேலும் தெரிவிக்கையில்,

காரைநகர் சிறுமியைப் பார்ப்பதற்காக பலர் செல்கின்ற போதிலும் அந்தக் குடும்பத்திற்கு எந்தவித உதவிகளும் வழங்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

இதேவேளை, குறித்த சிறுமிக்கு நீதி வழங்குவதற்கு மாறாக, அந்தச் சிறுமியின் தாயார் மீது வீணான பழிகளைச் சுமத்தும் முனைப்பில் பொலிஸாரும் அதிகார தரப்புக்களும் ஈடுபட்டுவருவதாக தமக்குத் தெரியவந்திருப்பதாகவும் சஜீவன் குற்றம்சாட்டினார்.

அதேவேளை,வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயம் என்று கூறப்படும் பிரதேசத்தில் இராணுவம் சகல விதமான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றார்கள்.

குறிப்பாக உல்லாச விடுதி, விவசாயம், விளையாட்டு மைதானம், ஜனாதிபதிக்கு மாளிகை, காப்பெற் வீதிகள், மின்சார வேலைகள் அனைத்தையும் செய்து ஆடம்பரமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு எமது மக்களை தொடர்ந்தும் நிர்க்கதிக்கு உள்ளான நிலையில் வீடு வாசல்கள் அற்றவர்களாக்கி வைத்திருக்கின்றனர்.

இதற்கு முன்னிருந்த இராணுவ அதிகாரிகளும் இதைத்தான் செய்து கொண்டிருந்தார்கள். புதிதாக வந்தவர்கள் ஏட்டிக்குப் போட்டியாக மக்களை நடுத்தெருவில் நிறுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

ஒரு சில கோவில்களுக்கும் தேவாலயங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால்  அங்கு உள்ள உல்லாச விடுதிக்கு மக்கள்; சென்று வர அனுமதித்து உள்ளார்கள். அத்துடன் விடுமுறை நாட்களில் அங்கு மதுபானம் விற்கப்படுகின்றது. பிரதேச சபையுடனும் எந்த விதமான தொடர்புகளும் ஏற்படுத்தாமல் சர்வதிகாரப் போக்கில் நடந்து கொள்கிறார்கள். இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3500 இற்கும் மேற்பட்டவர்கள் வேலை பெற்றிருந்த சீமெந்து ஆலை தற்போது உடைக்கப்படுகின்றது. அங்கிருந்த கம்பிகள், கேடர்கள் கடத்தப்படுகிறது. இது தொடர்பாக பிரதேச சபைக்கு எந்த விதமான அறிவித்தலும் கொடுக்காமல் இச்செயற்பாடு நடந்து கொண்டு இருக்கின்றது.

எமது சொத்துக்களை திட்டமிட்ட ரீதியில் அழித்துக் கொண்டிருக்கிறார்கள். பல தரப்பட்ட அதிகாரிகளுக்கு இது தொடர்பாக அறிவிக்கப்பட்டிருந்தும் எந்தவிதமான நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்படவில்லை. வடக்கு மாகாணசபையும் நாடாளுமன்றமும் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .