2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

போலி பொதுச்சுகாதார பரிசோதகருக்கு விளக்கமறியல்

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 14 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

தன்னை பொதுச்சுகாதார பரிசோதகர் எனக்கூறி புன்னாலைக்கட்டுவான், ஈவினைப் பகுதிகளிலுள்ள உணவகங்களில் இலவசமாக உணவு உண்டு, கடைகளில் இலஞ்சமும் பெற்று வந்த பண்டத்தரிப்பு பல்லசுட்டியைச் சேர்ந்த சந்தேகநபரை, எதிர்வரும் 22ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் சி.சதீஸ்கரன் வியாழக்கிழமை (14) உத்தரவிட்டார்.

மேற்படி சந்தேகநபர், தன்னை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் எனக்கூறி மேற்படி மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், வாகையடியிலுள்ள கடையொன்றில் கடந்த திங்கட்கிழமை (11) சென்று, கடையில் டெங்கு பரவும் அபாயம் காணப்படுகின்றது. ஆகவே கடைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்போவதாகக் கூறியுள்ளார்.

அவ்வாறு வழக்குத் தாக்கல் செய்யாது விடுவதென்றால், தனக்கு 5 ஆயிரம் ரூபா பணம் தரும்படி கேட்டுள்ளார். உஷாரடைந்த கடை உரிமையாளர், தற்போது பணம் இல்லையெனவும் செவ்வாய்க்கிழமை (12) பணத்திற்கு வரும்படி கூறியுள்ளார்.

இதனையடுத்து, கடை உரிமையாளர் உடுவில் பிரதேச சபை மற்றும் சுகாதார வைத்தியதிகாரி பணிமனை ஆகியவற்றிற்கு இவ்வாறு ஒருவர் பணம் கேட்பதாக முறையிட்டுள்ளார்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (12) மேற்படி போலி நபர் பணம் வாங்க கடைக்கு வந்தவேளை, அங்கு ஒளிந்திருந்த சுகாதார வைத்தியதிகாரி மற்றும் கடை உரிமையாளர் ஆகியோர் இணைந்து மேற்படி நபரைப் பிடித்து சுன்னாகம் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து, மேற்படி நபர் இன்று வியாழக்கிழமை (14) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .