2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கிருஷ்ணாக் குழு கைது

Kogilavani   / 2014 ஓகஸ்ட் 15 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழில், வாள்வெட்டுச் சம்பவங்கள் மற்றும் சமூக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வந்தததாக கூறப்படும் கிருஷ்ணா என்ற குழுவைச் சேர்ந்த 4 பேரை கைதுசெய்ததாக மானிப்பாய் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆர்.ஏ.டி.றொஹான் மகேஷ் வெள்ளிக்கிழமை (15) தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்.மாவட்டத்தில் இடம்பெறுகின்ற சமூக விரோதச் செயல்களில் கிருஷ்ணாக் குழு ஈடுபட்டு வருவதாகவும்  அந்தக் குழு மானிப்பாய் பகுதியை மையமாக வைத்து இயங்கி வருவதாகவும் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரிடம் இருந்து தகவல்கள் கிடைக்கப்பெற்றன.

இந்நிலையில், வியாழக்கிழமை (14) அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்ட பொலிஸார், மானிப்பாய் சந்தைக்கருகில், சந்தேகத்திற்கிடமான முறையில் மோட்டார் சைக்கிள்கள், சைக்கிள்களில் வாள்களுடன் 8 பேர் நிற்பதை அவதானித்தனர்.

மானிப்பாய் பொலிஸ் நிலையத்திலிருந்து மேலதிகப் பொலிஸார் வரவழைக்கப்பட்டு, அந்தக் குழு சுற்றிவளைக்கப்பட்ட போது, அவர்கள் தப்பி ஓட முயன்றனர்.

இதனையடுத்து, காலுக்குக் கீழ் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு, நால்வர் கைதுசெய்யப்பட்டனர். மிகுதி நால்வரும் தப்பி ஓடியுள்ளனர்.

இவர்களில், 18, 21, 24 மற்றும் 25 வயதையுடையவர்களே  கைதுசெய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து 4 மோட்டார் சைக்கிள்கள், 2 துவிச்சக்கர வண்டிகள், 2 வாள்கள், 3 பொல்லுகள், 3 கத்திகள் என்பன மீட்கப்பட்டன.

துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சந்தேக நபர்களில் ஒருவர் காயமடைந்ததுடன் அவருக்கு மானிப்பாய் வைத்தியசாலையில்  சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

தப்பியோடிய ஏனையோரை கைதுசெய்யும் பணியில் விசேட பொலிஸ் குழு உருவாக்கப்பட்டு, தேடுல் பணி முடக்கி விடப்பட்டுள்ளது” என பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X