2025 ஜூலை 09, புதன்கிழமை

போலி மருத்துவத் தாதி கைது

Kanagaraj   / 2014 ஓகஸ்ட் 24 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-    செல்வநாயகம் கபிலன்

மருத்துவத்தாதியாக நடித்து பெண்ணின் 15 பவுண் நகைகளை அபகரித்துச் சென்ற பெண்ணை சனிக்கிழமை (23) மாலை கைது செய்ததாக கோப்பாய்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பாக பொலிஸார் மேலும் தெரிவிக்கையில், 

யாழ். திருநெல்வேலி பத்திரகாளி கோவில் பகுதியில் வசிக்கும் பெண்மணியொருவர் திருமணமாகி 5 வருடங்கள் கடந்த நிலையிலும் குழந்தைப் பேறு கிடைக்கவில்லை.

இந்நிலையில், இவர்களின் வீட்டிற்கு வந்த இளம்பெண் ஒருவர், தான் குழந்தை விருத்தி நிலையத்தில் மருத்துவத்தாதியாகக் பணியாற்றுவதாகவும், இது தொடர்பில் சிறப்புத் தேர்ச்சி மிக்க வைத்தியர் இருக்கின்றார். அவரிடம் உங்களுக்கு அனுமதி எடுத்துத் தருகின்றேன் எனக்கூறியுள்ளார்.

தொடர்ந்து, கடந்த திங்கட்கிழமை (18) வீட்டிற்கு வந்த மேற்படி பெண், குறித்த வைத்தியர் பரமேஸ்வராச் சந்தியிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு வருவார் என்று கூறி, சிகிச்சை பெறுவதற்கு வரும்படி வீட்டிலிருந்த பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார்.

வைத்தியசாலைக்குச் சென்றதும், மேற்படி வைத்தியரிடம் சிகிச்சை பெறும் போது நகைகள் அணியக்கூடாது எனக்கூறி, சிகிச்சைக்கு வந்த பெண் அணிந்திருந்த சங்கிலி மற்றும் காப்புக்களை வாங்கியுள்ளார்.

தொடர்ந்து, பெண்ணின் திருநெல்வேலியில் அமைந்துள்ள வீட்டிற்குச் சென்று, வீட்டில் இருந்தவர்களிடம், சிகிச்சைக்குச் சென்றவர் தாலிக் கொடியை மறந்துவிட்டுச் சென்றுவிட்டதாகவும், அதனைத் தரும்படியும் கேட்டு வாங்கிக் கொண்டு சென்றுவிட்டார்.

வைத்தியசாலையில் சிகிச்சைக்காக இருந்த பெண், நீண்ட நேரமாகியும் வைத்தியர் வருகை தராதமையால், வைத்தியசாலை நிர்வாகத்திடம் மேற்படி வைத்தியர் எப்போது வருவார் எனக் கேட்டுள்ளார்.

எனினும், அதற்கு வைத்தியசாலை நிர்வாகம் அவ்வாறானதொரு வைத்தியர் இங்கு வருவதில்லையென கூறியுள்ளார்.

இதனையடுத்து, மேற்படி பெண் வீட்டுக்கு திரும்பிய போதே, மருத்துவதாதி போல வேடமிட்ட பெண் தன்னை ஏமாற்றியமை தெரியவந்தது.
இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தனது 15 பவுண்கள் நகைகள் இவ்வாறு அபகரிக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை கொண்டு, திருநெல்வெலி ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த பெண்ணை சனிக்கிழமை (23) கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேற்படி பெண் அபகரித்த நகைகளை தனியார் அடைவு நிலையமொன்றில் அடைவு வைத்து, அந்தப் பணத்தை வட்டிக்கு கொடுத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .