2025 ஜூலை 09, புதன்கிழமை

சினிமா, தொலைக்காட்சியால் பாரம்பரிய கலைகள் பாதித்துள்ளன: சி.வி

Menaka Mookandi   / 2014 ஓகஸ்ட் 26 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

சினிமாவும் தொலைக்காட்சியும் எந்தளவுக்கு எமது பாரம்பரிய கலைகளைப் பாதித்துள்ளன என்பது பற்றி ஆராயப்படவேண்டியது அவசியமானதொன்று. விஞ்ஞான வளர்ச்சி இசைக் கலையில் பலவித முன்னேற்றங்களையும் அதேநேரம் பின்னடைவுகளையும் ஏற்படுத்தியுள்ளது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திங்கட்கிழமை (25) இரவு தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலுள்ள இந்தியத் துணைத்தூதரகம், புதுடெல்லியிலுள்ள கலாசார உறவுகளுக்கான இந்தியப் பேரவை, கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகம், இந்திய இலங்கை அறக்கட்டளை மையம் மற்றும் வடமாகாண சபையின் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு என்பவற்றுடன் இணைந்து நடத்தும் தெய்வீக சுகானுபவம் இசைக்கச்சேரி நல்லூர், சங்கிலியன் தோப்பில் திங்கட்கிழமை (25) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது,

எங்கள் இளமைக் காலத்தில் கிரிக்கெட், கால்பந்து விளையாடுவது, இசைக் கலையில் ஈடுபடுவது நேரத்தை விரயமாக்கும் செயல்கள் என்றே கணித்திருந்தார்கள்.

இன்று கிரிக்கட் கலைஞர்களும், கால்ப்பந்து விளையாட்டாளர்களும், சங்கீத விற்பன்னர்களும் பெருவாரியான பணம் சம்பாதிப்பவர்களாக இருந்து வருகின்றார்கள். எனக்கு இசையில் ஈடுபாடு  இருந்து கொண்டே இருந்தது. சிறுவயதில் நிறைவேறாத இசை ஈடுபாடு யாழ்ப்பாணத்துக்கு வந்ததும் ஏற்பட்டது.

சாவகச்சேரி மாவட்ட நீதிபதியாக பதவி பெற்று வந்ததும் இலங்கையின் சிரேஸ்ட கர்நாடக இசை விற்பன்னர் திரு ஷண்முகரத்தினத்தை எனது வீட்டிற்கு அழைத்து முறையாகக் கர்நாடக இசையைப் படிக்க எத்தனித்தேன்.

என் போதாத காலம். மூன்று மாதத்திலேயே மாடு முட்டி அவர் அகால மரணமடைந்து விட்டார். இன்று பல இளைஞர்கள், யுவதிகள் படிப்பில் மிக நன்றாகப் பிரகாசிக்கும் அதேநேரம் கலைகளிலும் சிறந்து விளங்குகின்றார்கள்.

தெருத் தெருவாய் அலைந்து திரிந்து தான் எமது கலைகளைச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் அவர்களுக்கில்லை. அவர்கள் வேறு தொழில்களில் ஈடுபட்டுக்கொண்டே இன்று இசை உலகிலும் பிரகாசிக்கின்றார்கள். நல்ல வருமானத்தைப் பெற்று வருகின்றார்கள்.

இசையும் தற்பொழுது பல விதங்களில் காலத்துக்குத்தக்கவாறு மாறி வருகின்றன. அடிப்படைக் கர்நாடக இசை அத்திவாரத்தை அமைத்துக் கொண்டால் எந்த ஒரு பிற மொழி இசையையும் கையாளக்கூடிய தகைமையையும் எமது பாடகர்கள் பெற்று விடுகின்றார்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .