2025 ஜூலை 09, புதன்கிழமை

மிருகபலிக்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரதம்

George   / 2014 ஓகஸ்ட் 31 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த், வி.தபேந்திரன்


தென்மராட்சியிலுள்ள சைவ ஆலயங்களில் இடம்பெறும் மிருக பலியை நிறுத்தக்கோரி தென்மராட்சி அறவழிப் போராட்டக்குழுவின் ஏற்பாட்டில் உண்ணாவிரதப் போராட்டமொன்று கைதடிச் சந்தியில் இன்று ஞாயிற்றுக்கிழமை (31) முன்னெடுக்கப்படுகின்றது.

அறவழிப் போராட்டக் குழு நிறுவுனர் மறவன்புலவு க.சச்சிதானந்தன் தலைமையில், காலை 6 மணி தொடக்கம் மாலை 6 மணி வரை இந்த உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்தப் போராட்டம் குறித்த தென்மராட்சி அறவழிப் போராட்டக் குழுவினர் கூறுகையில்,

எழுதுமட்டுவாள், மிருசுவில், வரணி, மந்துவில், மட்டுவில், நுணாவில், கைதடி கிழக்கு, கைதடி வடக்கு, கைதடி மேற்கு, ஆகிய ஊர்களில் உள்ள சில சைவத் திருக்கோயில்களில் உயிர்ப்பலி கொடுக்கும் வழமையை கைவிடக்கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

தென்மராட்சியில் களப்பிட்டி முனீஸ்வரன் கோயில், கிராஞ்சி அண்ணமார் கோயில், இயத்தை அண்ணமார் கோயில், சாமித்தறை அண்ணமார் கோயில், இடிகிடங்கு முனீஸ்வரன் கோயில், பொன்னாங்கூடல் வைரவர் கோயில் ஆகியனவற்றில் உயிர்ப்பலி கொடுக்கும் நிகழ்ச்சிகள் நடந்தேறி வருகின்றன.

சைவ சமயமும் தமிழ் மரபுகளும் சிறப்பாகப் பேணப்படும் தமிழகத்திலும் புதுச்சேரியிலும் வழிபாட்டிடங்களில் உயிர்ப்பலியைத் தடைசெய்யும் சட்டங்கள் உள்ளன.

ஆந்திரம் கார்நாடு என்ற கர்நாடகம், கூர்ச்சரம் எனும் குஜராத், இராசபுத்திரம் என்ற இராஜஸ்தான், மலையாளம் என்ற கேரளம் ஆகிய இந்திய மாநிலங்களிலும் வழிபாட்டிடங்களிலும் உயிர்ப்பலித் தடைச்சட்டம் உண்டு.

1981இல் இலங்கையில் வழிபாட்டிடங்களில் உயிர்ப்பலியிடக்கூடாதென்ற அரச ஆணை வந்தது. ஆனாலும் அந்த ஆணையை நீதிமன்றங்கள் ஏற்கவில்லை. இப்பொழுது உணவுக்கு இறைச்சிவெட்டும் கொலைக் களச்சட்டங்களும், உணவுத் தரச் சட்டங்களுமே வழிபாட்டிடங்களில் உயிர்ப்பலியை நீதிமன்றம் வழியாக ஓரளவு கட்டுப்படுத்தி வருகின்றன.

சைவத் திருக்கோயில்களை உணவுக்கு இறைச்சி வெட்டும் கொலைக்களங்களாகப் பிரதேச சபைகள் அறிவிக்கின்றன. தமிழ்ச் சைவச் சமூகத்தின் பண்பாட்டு வீழ்ச்சியை இந்த அறிவிப்பு எடுத்துக் காட்டுகிறது.

வழிபாட்டுக்கு நான்கு நிலைகள். இவ்வழிகள் அறிவு சார்ந்தன, அன்பு சார்ந்தன, அறம் சார்ந்தன. அருள் சார்ந்தன. அறிவுக் குறைவால், அன்புத் தளர்ச்சியால் அறம் தவிர்ந்ததால் நம்பிக்கைச் சிதறலால் திருக்கோயில்களிலே உயிர்ப்பலி கொடுக்க முனைகிறார்கள்.

வழிபாட்டிடங்களில் உயிர்ப்பலிக்குத் தடைச் சட்டம் கொண்டுவருமாறு கோரி தென்மராட்சியில் கையெழுத்து நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. யாழ்ப்பாணத்தில் இதுவரை 3000 பேர் இதற்கெதிராக கையொப்பமிட்டுள்ளனர். வடக்கிலும் கிழக்கிலும் மலையகத்திலும் 10 ஆயிரம் பேருடைய கையெழுத்துகளைத் திரட்டி அரசிடம் கொடுக்க உள்ளோம்.
 
இந்தியாவின் பல மாநிலங்களில் உள்ளது போன்று இலங்கையிலும் வழிபாட்டிடங்களில் உயிர்ப்பலிக்குத் தடைச் சட்டம் கொண்டுவரப்படவேண்டும் என தெரிவித்தனர்.

இந்த உண்ணா போராட்டத்தில் அறவழிப் போராட்டக் குழுச் செயலாளர் தங்கவேல், ஆர்வலரும் சாவகச்சேரிப் பிரதேச சபை உறுப்பினருமான ச.தங்கராசா ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .