2025 ஜூலை 09, புதன்கிழமை

விவசாய அமைச்சினால் ஆடுகள் கையளிப்பு

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 03 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா


வடமாகாண விவசாய அமைச்சினால் அளவெட்டி பகுதியில் பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட 32 பயனாளிகளுக்கு, சணல் என்று அழைக்கப்படும் சாணன் இன ஆடுகள், செவ்வாய்க்கிழமை (02) மாலை வழங்கப்பட்டன.

அளவெட்டி சைவ மகா சபை மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனால் இந்த ஆடுகள் கையளிக்கப்பட்டன.

தகர் என்ற திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மேற்படி 32 ஆடுகளும் 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதிமானவையென விவசாய அமைச்சு தெரிவித்தது.

மேற்படி குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், தங்களின் வாழ்வாதரத்தை விருத்தி செய்துகொள்ள வேண்டும் என்ற நோக்குடன் இந்த ஆடுகள் வழங்கப்பட்டதாக அமைச்சு மேலும் தெரிவித்தது.

இந்நிகழ்வில், வடமாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், வடமாகாண சபை உறுப்பினர்களான அனந்தி சசிதரன், பாலச்சந்திரன் கஜதீபன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆடுகள் வழங்கிய பின்னர் சி.வி.விக்னேஸ்வரன் உரையாற்றுகையில் கூறியதாவது,

'ஆடுகள் சண்டையிடும்போது பின் வாங்குவது திருப்பித் தாக்குவதற்கு வேகம் பெறுவதற்காகவே. இதனையே திருவள்ளுவர் தனது திருக்குறளில் காலம் அறிதல் என்ற அதிகாரத்தில் 'ஊக்கம் உடையான் ஒடுக்கம், பொருதகர் தாக்கற்குப் பேரும் தகைத்து' என்று குறிப்பிட்டுள்ளார்.

அது போன்றே நாம் இப்போது பின்னடைவைச் சந்தித்திருந்தாலும் எதிர்காலத்தில் நிச்சயமாக நன்மை அடைவோம். அந்தவகையில் தகர் என்று பொருத்தமாகப் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தத் திட்டத்தின் மூலம் போரினால் பாதிக்கப்பட்ட எமது பெண்களின்; வாழ்வாதாரமும் முன்னேற்றம் அடையும்' என தெரிவித்தார்.

விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் உரையாற்றுகையில் கூறியதாவது,


பழந்தமிழ் இலக்கியங்களில் ஆடு 'தகர்' என்ற பெயரிலேயே அழைக்கப்பட்டுள்ளது. அதனைத் திட்டத்தின் பெயராகவும், 'தகர் வளர் துயர் தகர்' என்பதைத் திட்டத்தின் மகுட வாசகமாகவும் கொண்டு, இந்த ஆடு வளர்ப்புத் திட்டம் பெண் தலைமைத்துவ குடும்பங்களின் பொருளாதாரத்தை மேம்பாடு அடையச் செய்வதோடு நல்லின ஆடுகளை விருத்தி செய்வதையும் நோக்கமாகக் கொண்டது. 

இந்தத்; திட்டம் வடமாகாணம் பூராகவும் விஸ்தரிக்கப்படவுள்ளதால் திட்டத்தை முன்னெடுப்பதற்குப் புகலிட நாடுகளில் வசிக்கும் எமது உறவுகள் இங்குள்ள அவர்களது உறவுகளுக்கு உதவ முன்வர வேண்டும்' என்று தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .