2025 ஜூலை 10, வியாழக்கிழமை

அடிப்படை தேவைகளை கோரி மனு கையளிப்பு

George   / 2014 செப்டெம்பர் 06 , மு.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பொ.சோபிகா, எம்.றொசாந்த்


சொந்த மண்ணில் மீள்குடியேறும் வரை ஐந்து நலன்புரி நிலையங்களில் வசிக்கும் மக்களின் வாழ்வாதார தேவைகளை நிறைவேற்றி தருமாறு கோரி, பூந்தளிர் மாவட்ட பெண்கள் அமைப்பு, மாவட்ட மீனவர்கள் ஒத்துழைப்பு இயக்கம் ஆகியன இணைந்து யாழ் மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் கி.கருநாகரனிடம் மனுவொன்றை வெள்ளிக்கிழமை (05) கையளித்துள்ளனர்.

மாவட்டச் செயலகத்தில் மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் இல்லாத காரணத்தால் நிர்வாக உத்தியோகத்தரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.

சுன்னாகம் சபாபாதிப்பிள்ளை நலன்புரிமுகாம், மல்லாகம் நீதிமன்ற நலன்புரி முகாம், சுன்னாகம் கண்ணகி நலன்புரி முகாம், மல்லாகம் கோணற்புலம் நலன்புரி முகாம், உரும்பிராய் யோகபுரம் நலன்புரி முகாம் ஆகிய நலன்புரி முகாம்களின் அடிப்படை தேவைகள் குறித்தே மனு கையளிக்கப்பட்டன.

மழை காலத்தில் தங்கி வாழக்கூடிய வகையில் குடிசைகளை திருத்தித் தரவேண்டும், பெண்கள் குளிக்கக்கூடிய வகையில் மறைவான அமைவிடங்கள் வேண்டும், மலசலகூடம், நீர்வசதிகள் பற்றாக்குறையாகவுள்ள முகாம்களுக்கு மேலதிக வசதிகள் வழங்க வேண்டும், பாடசாலையில் இருந்து இடைவிலகும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்க வேண்டும், மற்றும் நிறுத்தப்பட்ட நிவாரணத்தை மீளவும் பெற்றுத்தரவேண்டும் ஆகிய கோரிக்கைகளை உள்ளடக்கியதாக மனு கையளிக்கப்பட்டுள்ளது.

மேற்படி ஐந்து நலன்புரி முகாம்களிலும் 500 குடும்பங்களை சேர்ந்த 1873 பேர் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .