2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

உணர்ச்சி பேச்சுக்களால் அரசியல் உரிமைகளை வென்றெடுக்க முடியாது : டக்ளஸ்

George   / 2014 செப்டெம்பர் 08 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


உணர்ச்சி பேச்சுக்களாலும் நடைமுறை சாத்தியமற்ற வழிமுறைகளில் மூலம் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாது என்பதுடன் எமது மக்களின் அரசியல் உள்ளிட்ட உரிமைகளையும் ஒருபோதும் வென்றெடுக்க முடியாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அமைச்சரின் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (8) இடம்பெற்ற பேராதனை பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டதாரிகளை சந்தித்து, கலந்துரையாடிய போதே அவர் இதனை கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கோரிக்கைகள், நியாயத்தினதும் தேவைகளினதும் அடிப்படையில் தீர்த்து வைக்கப்பட வேண்டுமென்பதே எமது நிலைப்பாடாகும்.

அதுவும் நடைமுறைசாத்தியமான வழிமுறைகளினூடாகவும் அரசின் கொள்கைத் திட்டங்களுக்கு அமைவாகவும் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இதைவிடுத்து வீராவேசப் பேச்சுக்களாலும் உணர்ச்சிப் பேச்சுக்களாலும் எமது மக்களுக்கான அரசியல் உள்ளிட்ட உரிமைகளை ஒருபோதும் வென்றெடுக்க முடியாது என்பதுடன் தேசியப் பிரச்சினைக்கு நடைமுறை யதார்த்த வழிமுறைகளின் மூலமே தீர்வுகாண முடியுமென்பதே எமது நிலைப்பாடாகும்.

1974 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் நிறுவப்படவிருந்த நிலையில் முதற்கட்டமாக வளாகமாக ஆரம்பிக்கப்பட்ட போது அப்போதைய தமிழர் தலைமைகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இருந்த போதிலும் அப்போதைய அரசு எதிர்ப்புக்களை மீறி வளாகத்தை நிறுவியதன் பயனாகவே யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகமாக பரிணாமம் பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்று எதிர்ப்பரசியல் செய்வதனால் எமது மக்களுக்கு எதுவும் கிடைக்கப் போவது இல்லை.

இதன் காரணமாகவே நாம் இணக்க அரசியலைத் தெரிவு செய்து அதன்வழியூடாக மக்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாத்து பலப்படுத்தும் வகையில் பல்வேறுபட்ட அபிவிருத்தி செயற்திட்டங்களை அரசின் கொள்கைத் திட்டங்களுக்கு அமைவாகவும் மக்களின் நலன்களை முன்னிறுத்தும் வகையில் நடைமுறைப்படுத்தி வருகின்றோம் என்றும் தெரிவித்தார்.

இதன்போது பேராதனை பல்கலைக்கழகத்தில் வெளிவாரி பட்டதாரிகளாக தமது பட்டப் படிப்புக்களை 2012 ஆம் ஆண்டு பூர்த்தி செய்திருக்க வேண்டிய மாணவர்கள் விரிவுரையாளர்களின் வேலைநிறுத்தம் மற்றும் மாணவர்களின் விரிவுரை பகிஸ்கரிப்பு காரணமாக 2013 ஆம் ஆண்டுதான் பட்டப்படிப்புக்களை பூர்த்தி செய்திருந்தனர்.

இந்நிலையில் அதேயாண்டு நாடுபூராகவும் வழங்கப்பட்ட பட்டதாரி நியமனங்களில் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் நியமனங்களின் போது உள்வாங்கப்படவில்லை. இந்நிலையிலேயே இச்சந்திப்பு இன்றைய தினம் இடம்பெற்றிருந்தது.

குறிப்பிட்ட நிலமையை கருத்தில் கொண்டு தமது நியமனம் தொடர்பில் உரிய நடவடிக்கை முன்னெடுக்குமாறு அமைச்சர் அவர்களிடம் பட்டதாரிகள் கோரிக்கை முன்வைத்த போது பட்டதாரிகளின் கருத்துக்களையும் அமைச்சர் அவர்கள் கேட்டறிந்து கொண்டார்.

இந்த சந்திப்பில், ஈ.பி.டி.பியின் சர்வதேச முக்கியஸ்தர் விந்தன், ஈ.பி.டி.பியின் சர்வதேச இணைப்பாளர் மித்திரன், அமைச்சரின் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .