2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

சிறப்பு பாட தெரிவிற்கு அனுமதி; யாழ். பல்கலை மாணவர் போராட்டம் நிறைவு

Menaka Mookandi   / 2014 செப்டெம்பர் 18 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட 2ஆம் வருட மாணவர்களில் சிறப்பு பட்டத்திற்கான பாடத்தெரிவை விரும்பும் மாணவர்களுக்கு அனுமதியளிக்கப்படுவதாக பல்கலைக்கழக கலைப்பீட நிர்வாகம் உறுதியளித்துள்ளது.

இதனையடுத்த, வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தை கைவிடுவதாக கலைப்பீட மாணவர் ஒன்றியம் தெரிவித்ததுடன், வெளிமாவட்ட மாணவர்கள் அவர்களின் ஊர்களுக்கு சென்றமையால் எதிர்வரும் திங்கட்கிழமை (22) முதல் விரிவுரைகளுக்கு சமூகமளிப்பதாக ஒன்றியம் கூறியுள்ளது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களின் சிறப்பு பட்டங்கள் பெறுவதற்கான பாட தெரிவில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல், விரிவுரைகள் ஒழுங்காக நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் மற்றும் வகுப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்கள் கடந்த 16ஆம் திகதி பல்கலைக்கழக வளாகத்தில் கவனயீர்ப்பு போராட்டத்தை நடத்தினார்கள்.

கவனயீர்ப்பு போராட்டத்தை தொடர்ந்து காலவரையற்ற வகுப்பு புறக்கணிப்பிலும் மாணவர்கள் ஈடுபட்டனர். கலைப்பீடத்தில் முதலாம் ஆண்டு பரீட்சையில் சித்தியடைபவர்கள் 3.0 ஜி.பி.ஏ அடைவு மட்டத்தை பெற்றால் இரண்டாம் வருடத்தில் இருந்து சிறப்பு கலை பட்டம் (4 வருடங்கள்) பெறுவதற்கு விரும்பிய பாட தெரிவுகளை மேற்கொள்ள முடியும். 3.0 ஜி.பி.ஏ பெறாதவர்கள் பொது கலைமாணி பட்டத்துடன் (3 வருடங்கள்) வெளியேறவேண்டும்.

தற்போதுள்ள இரண்டாம் வருட மாணவர்களில் 644 மாணவர்கள் இருக்கின்றனர். வழமையாக கலைப்பீடத்திற்கு 400 தொடக்கம் 450 வரையிலான மாணவர்களே உள்வாங்கப்படுவார்கள்.

இந்நிலையில், தற்போது சிறப்பு கலைப்பட்டத்திற்கு மாணவர்களை உள்வாங்கும் போது 3.0 என்ற ஜி.பி.ஏ விட கூடுதலான ஜி.பி.ஏ யின் பெறுமானத்தை அதிகரித்து, ஒவ்வொரு பாடத்திலும் வழமையான எண்ணிக்கையான 40 என்ற மாணவர்கள் தொகையே உள்வாங்கப்பட்டது.

குறிப்பாக புவியியல், அரசியல் விஞ்ஞானம், பொருளியல் ஆகிய பாடங்களில் இந்த நடைமுறையை கலைப்பீட நிர்வாகம் பின்பற்றியுள்ளது. அதிகளவான மாணவர்கள் முதலாம் வருடத்தில் கற்றவர்கள் என்பதனை கருத்திற்கொள்ளாமல் நிர்வாகம் வழமையான மாணவர் எண்ணிக்கையில் பாடங்களுக்கு மாணவர்களை உள்வாங்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இதனால், ஜி.பி.ஏ 3.0 க்கு மேல் பெற்று சிறப்பு பாடத்தெரிவு மேற்கொள்ள விரும்பிய பல மாணவர்கள் சிறப்பு கலை பட்டத்திற்கான பாடங்களை தெரிவு செய்து படிக்க முடியாமல் பாதிக்கப்பட்டனர். இதன்நிமிர்த்தமே கவனயீர்ப்பு போராட்டமும், வகுப்பு புறக்கணிப்பு போராட்டமும் மாணவர்களால் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில் பல்கலைக்கழக நிர்வாக கலைப்பீட நிர்வாகம், மற்றும் கலைப்பீட மாணவர் ஒன்றியம் ஆகியோருக்கிடையிலான கலந்துரையாடல் புதன்கிழமை (17) மாலை இடம்பெற்றது.  இதன்போது, சிறப்பு பாட தெரிவை மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு அனுமதி வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டது. மேலும், வகுப்பு வசதிகளை உடனடியாக மேற்கொள்வது சிரமம் என்பதுடன் அதற்கு கால அவகாசம் தேவைப்படும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகத்தால் கூறப்பட்டது.

அத்துடன், விரிவுரைகளை ஒழுங்காக நடைபெறுவதற்குரிய நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது. இதனையடுத்து, மாணவர்களின் போராட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன.

மேலும், டெங்கு நோய்த்தாக்கத்தால் விடுமுறை விடப்பட்டுள்ள கலைப்பீட 1ஆம் மற்றும் 4ஆம் வருட மாணவர்களுக்கான விரிவுரைகள் எதிர்வரும் வாரத்திலும் ஆரம்பமாகமாட்டாது என கலைப்பீட நிர்வாகம் அறிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .