2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

காங்கேசன்துறை ஜனாதிபதி மாளிகையை யாழ். பல்கலைக்கு வழங்க கோரிக்கை

Kanagaraj   / 2015 ஏப்ரல் 22 , மு.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உத்தரவுக்கமைய யாழ்ப்பாணம், காங்கேசன்துறையில் நிர்மாணிக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகையில் சுமார் ஐந்நூறு பேர் வரை தங்கியிருந்து படிக்கக்கூடிய மண்டபமொன்று இருப்பதால் அதனை யாழ்ப்பாண பல்கலைகழகத்துக்கு வழங்குமாறு வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் அந்த குழு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

வடமாகாணத்தில் இருக்கும் தமிழ் , முஸ்லிம் மற்றும் சிங்கள மாணவர்கள், கடந்த முப்பது வருடங்களாக போரினாலும் வன்முறைகளாலும் தமது கல்வியில் பெரும் பாதிப்பை எதிர்நோக்கியிருந்தனர்.

அண்மையில் வடமாகாணத்துக்கு விஜயம் செய்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் கல்வியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்காக விசேட கல்விக் கொள்கை ஒன்றை வகுக்கவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். 

மாணவர்களின் கல்வித் தரத்தை வழமைக்கு கொண்டுவர வேண்டும் எனவும் இது சம்பந்தமாக கல்வித் திணைக்களம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரதமர் பணித்திருந்தார்.

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதியினால் காங்கேசன்துறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகை அல்லது ஜனாதிபதி மாநாட்டு மண்டபம் பற்றி அண்மைக்காலமாக பேசப்பட்டு வருகின்றது.

அதை ஆறு நட்சத்திர உல்லாச பயணிகள் விடுதியாக மாற்ற  வேண்டும் என ஜனாதிபதியும் பிரதமரும் அறிவித்துள்ளதாக ஊடக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த தருணத்தில் வடக்கு, கிழக்கு, தெற்கு கல்விமான்கள் புத்திஜீவிகள் போன்றோர், யாழ்ப்பாண பல்கலைகழகம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு போன்றவைகளுக்கு  தமது முழுமையான அழுத்தத்தை பிரயோகித்து ஐநூறு பேர் தங்கிப் படிக்கக்கூடிய காங்கேசன்துறையில் அமைந்துள்ள கட்டடத்தை யாழ்ப்பாண பல்கலைகழகத்துக்கு வழங்குமாறு கோரிக்கை விடுக்கின்றனர்' என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .