2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மக்களை தொடர்ந்து ஏமாற்றுவதே கூட்டமைப்பின் பணி: டக்ளஸ்

Kanagaraj   / 2015 ஏப்ரல் 22 , மு.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் கொள்கை வகுக்கும் பிரதான அமைப்பான தேசிய நிறைவேற்றுச் சபையில் அங்கம் வகித்துக்கொண்டு, நாங்கள் இந்த அரசுடன் முழுமையாகச் சேரவில்லை எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறுவது, எமது மக்களை ஏமாற்றும் செயலாகும். இப்பணியையே கூட்டமைப்பினர் தொடர்ந்தும் செய்து வருகின்றனர் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். 

இது தொடர்பில் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள தேவானந்தா, அதில் மேலும் கூறியுள்ளதாவது, 
'கடந்த 19ஆம் திகதி, களுவாஞ்சிக்குடி சரஸ்வதி வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின்போது, நாங்கள் இந்த அரசுடன் முழுமையாகச் சேரவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் கூறியிருக்கிறார்.

இந்த நாட்டின் கொள்கை வகுத்தல் தொடர்பான முக்கிய அமைப்பான தேசிய நிறைவேற்றுச் சபையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அங்கம் வகிக்கும் நிலையில்கூட,எமது மக்களின் பிரச்சினைகளை கூட்டமைப்பு தீர்ப்பதாக இல்லை. இது, இவர்களது அக்கறையின்மையையே காட்டுகின்றது. 

எமது மக்களின் பிரச்சினைகள் தீரக்கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்துவரும் கூட்டமைப்பினர், தங்களது சுயதேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதில் பின்னிற்பதில்லை. ஆனால், மக்களது தேவைகள் என வரும்போது, இவ்வாறான கதைகளைக் கூறி மக்களை ஏமாற்றவே முனைகின்றனர். இவ்வாறான நிலையில், 'தொடர்ச்சியாக எமது அரசியல் பலத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்'' என்றும் அரியநேத்திரன் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் பிரச்சினைகளைத் தீராப் பிரச்சினைகளாக்கிஇ அதனை இழுத்தடித்துக் கொண்டிருப்பதில்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் இருப்பு தங்கியிருக்கும் நிலையில், அவர்களது அரசியல் பலம் எமது மக்களுக்கு எதையுமே பெற்றுத்தராது என்பதே அவர்களது வரலாறு என்பதை எமது மக்கள் நன்கு புரிந்துகொண்டுள்ளனர்.

தங்களது கட்சிப் பதிவு விடயத்திலேயே ஓர் இணக்கப்பாட்டை எட்ட முடியாமல் இழுபறி நிலையில் இருந்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், மக்களது பிரச்சினைகளைத் தீர்ப்பார்கள் என்று நம்ப முடியுமா என்பதே எமது மக்களது கேள்வியாகவுள்ளது' என்று தனது அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .