Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Menaka Mookandi / 2015 ஏப்ரல் 23 , மு.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கம் முன்வைக்கின்ற அரசியலமைப்பின் 19 மற்றும் 20ஆம் திருத்தச் சட்டமூலங்களுடன் அடிப்படை உரிமைகள் சட்டவரைபையும் இணைத்துக்கொள்ள வேண்டும் என தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி கோரியுள்ளார்.
இது தொடர்பில் ஆனந்தசங்கரியினால் வியாழக்கிழமை (23) வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
'இரத்தம் சிந்தாத ஓர் அமைதிப் புரட்சி ஏற்பட்ட பின் இந்த நாட்டில் நடப்பவை ஏமாற்றத்தை தருகின்றன. எதிர்வரும் 27, 28ஆம் திகதிகளில் 19ஆம் மற்றும் 20ஆம் சட்டத் திருத்தச் சட்டமூலங்கள் சமர்ப்பிப்பதற்கு அல்லது விவாதத்துக்கு எடுபடுமா என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது.
இப்படியான நிலைமையை ஏற்படுத்துவது, மக்கள் தலைவர்கள் மீது வைத்த நம்பிக்கைக்கு பெரும் துரோகம் இழைப்பதாக அமையும். நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் மக்கள் ஒரு மாற்றத்தையே விரும்புகின்றனர். நல்லாட்சி ஒன்றை விரும்பும் மக்களின் அவாவை பூர்த்தி செய்யவேண்டியது ஒவ்வொருவருடைய கடமையுமாகும். நல்லதொரு அரிய சந்தர்ப்பம் கடவுளால் வழங்கப்பட்டுள்ளது. இதை இழப்போமேயானால் இன்னும் பல தலைமுறைகளுக்கு இப்பேற்பட்ட வாய்ப்பு மீண்டும் ஏற்படாது.
இலங்கையில் 55 ஆண்டுகளுக்கு மேல் நான் ஒரு சிரேஸ்ட அரசியல்வாதியாக செயற்பட்டு கொண்டிருப்பதை சிலரே அறிந்துள்ளனர். சிரேஸ்ட அரசியல்வாதிகளாக செயற்படுபவர்களில் நானும் ஒருவன். அதுவும் தமிழ் அரசியல்வாதிகளில் நான் ஒருவன் மட்டுமே இருப்பதாக நம்புகின்றேன். இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் நேசிக்கும் ஓர் நாட்டுப்பற்றாளனாவேன். எமக்கு ஏற்பட்ட பல்வேறு பிரச்சினைகள் பலவற்றிற்கு நல்ல தீர்வு என்னிடம் இருந்தும் அவை சம்பந்தமாக என்னிடம் எவரும் கலந்து ஆலோசிக்கவில்லை.
இன்றைய சூழ்நிலையில் நான் புறக்கணிக்கப்பட்டபோதும் நாட்டில் தழம்பல் நிலை ஏற்பட்டுள்ளபடியால் நாட்டுப்பற்றாளர் எவரும் எதிர்க்க முடியாத நல்லதொரு ஆலோசனையை கைவசம் வைத்துள்ளேன். நான் இப்போது கூற இருக்கும் ஆலோசனை நிலைமையை இலகுவாக்கி எமது இலக்கை இலகுவாக அடைய வழிசெய்யும் என நம்புகின்றேன்.
என்னுடைய ஆலோசனையானது தென்னாபிரிக்க அரசியல் சாசனத்தில் இடம்பெற்றுள்ள அடிப்படை உரிமை சட்ட வரைவை அப்படியே நாம் 19ஆம், 20ஆம் சட்டத் திருத்தங்களுடன் சேர்த்து அமுல்படுத்தினால் அது பெருமளவில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்படும். இருந்தும் ஏதாவது ஒரு காரணத்தினால் 19, 20ஆம் சட்டத்திருத்தம் மீண்டும் பிற்போடப்படும் சந்தர்ப்பம் ஏற்படுமேயானால் அடிப்படை உரிமைச் சட்டம் எதிர்ப்பின்றி நிறைவேறும் வாய்ப்புண்டு.
இதேபோன்றதொரு நிலைமை மீண்டும் ஏற்படாதென்றோ பிற்போட வைக்கப்படமாட்டாதென்றோ நம்பமுடியாது. இனப்பிரச்சினைக்கு என்னிடம் இருந்த தீர்வு ஆளும் கட்சிகளினாலும் எதிர்கட்சிகளினாலும் சில தேசியப் பத்திரிகைகளினாலும் பாராட்டப்பட்டிருந்தும் துரதிஷ்டவசமாக அது பரிசீலிக்கப்படவில்லை.
ஜனநாயகத்தின் அத்திவாரமாக அடிப்படை உரிமைச் சட்ட வரைவு தென்னாபிரிக்க மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதில் அந்த நாட்டிலுள்ள சகல மக்களின் உரிமைகள் உள்ளடக்கியதாக, ஜனநாயக, மனித கௌரவம், சமத்துவம், சுதந்திரம் ஆகியவற்றை உறுதிப்படுத்துகின்றதென நம்புகின்றனர். அடிப்படை உரிமைகளை மதித்து, பாதுகாத்து, மேம்படுத்தி சட்டத்தில் உள்ளவற்றை பேணிப்பாதுகாப்பதே அரசின் கடைமையாகும். சில முக்கிய விடயங்கள் பற்றி என்னோடு கலந்து ஆலோசிக்க வேண்டிய கடப்பாடு இருந்தும் தேசிய அரசாங்கத்தில் உயர்ந்த இடத்தில் முக்கிய மூன்று தலைவர்கள் இருந்தும் என்னுடன் அதைப் பற்றி ஆலோசிக்கவில்லை.
பல ஆண்டுகளாக படுமோசமான முறையில் மனச்சங்கடத்திற்கும் அவமதிப்புக்களுக்கும் முகம் கொடுத்தவன் நான். எனக்கு எதிராக தொலைபேசி மூலம் உபயோகிக்கப்பட்ட கெட்டவார்த்தைகளும் துர்வசனங்களும் ஒருவர் கோர்க்க நினைத்திருந்தால் பல தொகுதிகளாக சேர்ந்திருக்கும். கவலையான விடயம் என்னவெனில் திருமதி சந்திரிகா குமாரதுங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரில் பின் குறிப்பிட்டுள்ள இருவரிடமும் வேட்பாளர் நியமனம் தெரிவித்தவுடன் தொலைபேசி மூலமாக வாழ்த்து தெரிவித்திருந்தும் அவர்களின் வெற்றிக்கு பாராட்டு தெரிவிக்க முக்கூட்டு தலைவர்கள் எனக்கு சந்தர்ப்பம் தரவில்லை.
அவர்களின் வேட்புமனு சமர்பிக்கப்பட்டவுடன் அவர்களை ஆதரித்து எமது கட்சியின் தீர்மானத்தை இரு நாட்களுக்குள் பத்திரிக்கைகளில் அறிக்கை மூலம் தெரிவித்திருந்தேன். இவ்விருவரும் என்னுடன் பலகாலம் நாடாளுமன்றத்தல் அங்கத்துவம் வகித்தவர்கள். நான் எந்த உதவியையும் நாடி அவர்களிடம் சென்றவனல்ல.
சந்திரிகா அம்மையாரைப் பொறுத்தவரையில் என்னுடைய கௌரவத்திற்கும், நேர்மைக்கும் சான்று பகரக்கூடிய மிகப்பெரிய தகுதி பெற்றவராவார். இருந்தும் இவ்வாறு இம்மூவரும் நடப்பது மிகத் துரதிஷ்டவசமானதாகும். அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் உலகத்தையே தாம்தான் சுமந்து கொண்டிருப்பதாக நினைத்து செயற்படுவதற்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்' என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago