2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

வலசைப் பறவைகள் பற்றி மாணவர்களுக்கு களப்பயிற்சி

Thipaan   / 2015 மே 09 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

வட மாகாண சுற்றாடல் அமைச்சால் வலசைப் பறவைகள் (இனப்பெருக்கம் செய்யும் நாட்டிலிருந்து வேறொரு நாட்டுக்கு பனிக்காலத்தில் இடம்பெயரும்; பறவைகள்) பற்றி மாணவர்களுக்கு அறிவூட்டும் விதமாக, கருத்தமர்வும் வெளிக்கள பயிற்சியும் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்தது.

இது தொடர்பில் அமைச்சால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

சர்வதேச ரீதியாக ஆண்டுதோறும் மே மாதத்தின் இரண்டாவது வார இறுதி நாட்களில் உலக வலசைப் பறவைகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இதன்படி இம் மாதம் 9 ஆம் 10ஆம் திகதி உலக வலசைப் பறவைகள் தினம் ஆகும். இந்த தினத்தைக் கொண்டாடும் விதமாக வடமாகாண சுற்றாடல் அமைச்சு வலசைப் பறவைகள் பற்றிய கருத்தமர்வு மற்றும் வெளிக்களப் பயிற்சிகளை 9 மற்றும் 10ஆம் திகதிகளில் மாணவர்களுக்கு வழங்குவதற்கு யாழ்ப்பாணத்தில் ஏற்பாடுகள் செய்துள்ளது.

வட மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களில் இருந்தும் மாகாணக் கல்வி அமைச்சின் அனுசரணையுடன் தேர்வு செய்யப்பட்ட 100 மாணவ, மாணவிகள் இந்நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கின்றனர்.

இவர்களுக்கான கருத்தமர்வுகள் நெல்லியடி மத்திய கல்லூரியிலும் யாழ். மத்திய கல்லூரியிலும் இடம் பெறுவதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

யாழ். குடாநாட்டின் உள்ளேயும் வெளியேயும் காணப்படும் கடல்நீரேரிகளும், இவற்றையொட்டி வளரும் கண்டல் மரங்களும் பறவைகளுக்கு உவப்பான இயற்கைச் சூழலாக அமைந்துள்ளன.

இதனால், பருவகால மாற்றங்கள் ஏற்படும் போது தெனிலங்கையில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பறவை இனங்கள் இடம்பெயர்ந்து யாழ். குடாநாட்டுக்கு வந்து பின்னர் திரும்பிச் செல்கின்றன.  

மாணவர்களுக்கு எமது இயற்கைச் சூழல் குறித்தும் வலசைப் பறவைகள் குறித்தும் அறிவூட்டும் விதமாக பறவைகள் அதிகளவில் கூடும் தொண்டைமானாறு ஏரி, வல்லைவெளி, சரசாலை குருவிக்காடு, மண்டைதீவு ஆகிய இடங்களில் வெளிக்களப் பயிற்சி வழங்கப்படவுள்ளது.

கருத்துரைஞர்களாகவும் வெளிக்கள பயிற்சி வழங்குநர்களாகவும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விரிவுரையாளர்களோடு, பறவையியல் ஆய்வாளர்களும் கலந்துகொள்கின்றனர்.

உலக வலசைப் பறவைகள் தினத்தின் இறுதி நிகழ்ச்சி எதிர்வரும் ஞாயிறுக்கிழமை (10) பிற்பகல் 2 மணிக்கு யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் விருந்தினர் உரைகளும் மாணவர்களுக்கான பரிசு வழங்குதலும் இடம்பெறவுள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .