Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
எம். றொசாந்த் / 2018 ஒக்டோபர் 12 , பி.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசியல் கைதிகளின் விடுதலை என்பதனை சட்டப்பிரச்சனையாக பார்க்காது, அரசியல் பிரச்சனையாக பார்க்கப்பட்டு அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் முடிவெடுக்கப்பட வேண்டும் எனவும், அதுவரையில் அரசியல் கைதிகளிடம் இருந்து அவர்களின் போராட்டத்தை நாம் பொறுப்பெடுக்க வேண்டும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் கூடிய கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
அதன் பிரகாரம் நாளை (13) சனிக்கிழமை அநுராதபுர சிறைச்சாலைக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டு உள்ள அரசியல் கைதிகளை நேரில் சந்தித்து அவர்களிடம் இந்த வாக்குறுதியை வழங்கி அவர்களின் போராட்டத்தை முடித்து வைப்பதாக தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
யாழ். கைதடியில் உள்ள வடமாகாண முதலமைச்சரின் அலுவலகத்தில் இன்று (12) அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் முடிவெடுப்பதுக்காக அனைத்து தரப்பினருக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டு கலந்துரையாடல் இடம்பெற்றது.
இருந்த போதிலும் குறித்த கூட்டத்தில் புளெட் அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன், வடமாகாண சபை உறுப்பினர்களான பொ.ஐங்கரநேசன், பா.கஜதீபன், அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் தலைவர் அருட்தந்தை மா.சக்திவேல் உட்பட சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
குறித்த கூட்டம் முதலமைச்சர் தலைமையில் காலை 11 மணியளவில் ஆரம்பமானதை அடுத்து கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
அதன்போது புளெட் அமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன் கருத்து தெரிவிக்கையில்,
இந்த அரசாங்கம் எதுவும் விரைந்து செய்யாது. எனவே உணவு தவிர்ப்பு போராட்டத்தை கைவிடுமாறு அரசியல் கைதிகளை நேரில் சந்தித்த போது கோரியிருந்தேன். அதற்கு அவர்கள் வாக்குறுதி தந்தால் போராட்டத்தை கைவிடுவதாக கூறினார்கள்.
அவர்களிடம் நான் என்ன வாக்குறுதியை வழங்க முடியும். அப்போது பிரதமருடன் பேசி ஒரு முடிவை கூறுகிறேன். பிரதமரை நான் சந்தித்து இது தொடர்பில் பேசும் போது நிச்சயமாக அவர் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற வேண்டும், அல்லது அவருடன் பேச வேண்டும் என கூறுவார் என நான் அவர்களுக்கு கூறினேன்.
அதேபோன்றே நான் பிரதமருடன் கலந்துரையாடியபோது, அப்போதும் பிரதமர் சட்டமா அதிபருடன் கலந்துரையாடாது எதுவும் சொல்ல முடியாது என்றே கூறினார். ஆனால் இதுவரை எந்த முடிவும் கிடைக்க வில்லை.
அதற்காக போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளவர்களை அப்படியே விட முடியாது. சிவில் சமூகம் அவர்களின் போராட்டத்தை கையில் எடுத்து போராட்டத்தை முன்னெடுப்போம். அவர்களின் போராட்டத்தை முடிவுறுத்துவோம்.
அடுத்த மாதம் நாடாளுமன்றில் பாதீடு தொடர்பான விவாதம் நடைபெறவுள்ளது. அதன் போது பாதீட்டுக்கு வாக்களிக்கும் போது அரசியல் கைதிகளின் விடயத்தை பேரம் பேசலாம். அதற்கான அழுத்தத்தை நாம் வழங்கலாம்.
அரசாங்கத்துக்கு கூட்டமைப்பு வழங்கும் அழுத்தம் போதாது. அதேபோன்று அரசியல் கைதிகளின் விடுதலைக்காக வெளியில் நடக்கும் போராட்டங்களின் அழுத்தமும் போதாது உள்ளது. அவற்றுக்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பில் தீர்மானிப்போம் என தெரிவித்தார்.
அதேவேளை ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையில் அரசியல் கைதிகளை பயங்கரவாதிகள் என கூறுகின்றனர். அவர்கள் தனிப்பட்ட காரணத்துக்காக கொள்ளைக்கு போகவில்லை அரசியல் கொள்கை நோக்கத்துக்காக போராடப் போனாவர்கள்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சட்டமா அதிபருடன் பேசுவதாக கூறி அதனை மீண்டும் சட்டப்பிரச்சனையாக்க முயல்கின்றார். அரசியல் கைதிகளின் விடுதலை என்பது சட்டபிரச்சனை இல்லை அதொரு அரசியல் பிரச்சனை என கூட்டமைப்பு ஒரு முடிவுக்கு வர வேண்டும்.
அடுத்த மாதம் வரவுள்ள பாதீட்டை வைத்து தென்னிலங்கையில ஆட்சி கவிழ்ப்புக்கு மஹிந்த தலைமையில் திட்டம் தீட்டப்படுகின்றது. அந்நிலையில் நிச்சயமாக தமிழ் பிரதிநிதிகளின் வாக்குகள் செல்வாக்கு செலுத்தும். இந்த நிலையில் பாதீட்டை எதிர்த்து வாக்களிக்க போறோம் என அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தலாம்.
அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு தான் செய்ய வேண்டும் என இல்லை. அனைத்து தமிழ் பிரதிநிதிகளும் செய்யலாம். அரசியல் கைதிகளின் விடுதலையை பொறுத்தவரைக்கும் ஐக்கிய தேசிய கட்சியைச் சேர்ந்த விஜயகலா மகேஸ்வரன், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த அங்கஜன் இராமநாதன், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டோரும் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கலாம்.
வடக்கு, கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி பேதமின்றி அழுத்தம் கொடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
அதேவேளை அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் தலைவர் அருட்தந்தை மா. சக்திவேல் தெரிவிக்கையில்,
நாங்கள் அநாதைகள் ஆக்கப்பட்டுள்ளோம். அந்நிலையிலே நாம் தொடர்ந்து அரசியல் கைதிளின் விடுதலைக்கு போராட வேண்டும்.
தற்போது முன்னெடுக்கப்படும் போராட்டத்தை மக்கள் மயப்படுத்த வேண்டும். அதன் ஊடாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமின்றி ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசியல் கைதிகளின் விடுதலை சாத்தியமாகாது விடின், பாதீட்டை எதிர்த்து வாக்களிக்க வேண்டும்.
கிராம மட்டங்களில் இருந்து விழிப்புணர்வுகளை ஆரம்பித்து அதனூடாக பாரிய மக்கள் சக்தியை நாம் உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.
அரசியல் கைதியாக நீண்டகாலம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டு கொழும்பு விசேட நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்ட கோமகன் கருத்து தெரிவிக்கையில்,
அரசியல் கைதிகளின் விடுதலைக்கான போராட்டம் அரசியல் கைதிகளிடம் இருந்தே போராட்டம் ஆரம்பிக்கப்படுகின்றது. சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த கால பகுதியில் எம்மை எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் சந்தித்தார்.
அப்போது கடவுளை நான் நம்புகிறேன். என்னை நம்புங்கள் உங்கள் விடுதலையை சாத்தியமாக்குவோம் என வாக்குறுதி தந்தார். அப்போது நாம் அப்படி எமது விடுதலை சாத்தியமாகா விடின் என்ன செய்வீர்கள் என கேட்டோம். அதற்கு அவர் நாம் வீதிக்கு வருவோம். உங்களுக்காக போராடுவோம் என தெரிவித்தார். ஆனால் இன்னமும் விடுதலைகள் சாத்தியம் ஆகவில்லை. அவர்கள் வீதிக்கு வந்து போராடவும் இல்லை. அழுத்தம் கொடுக்கவில்லை.
சிறையில் எங்களுடைய ஆயுதம் உயிர் மற்றும் உணவு தான் அவற்றை வைத்தே நாம் போராட முடியும்.
போராட்டத்தின் ஊடாகவே நான் விடுதலை அடைந்தேன். இப்போது அவர்களின் போராட்டத்தை எப்படி நிறுத்த போகின்றோம். போராட்டத்தை நிறுத்தி என்ன செய்ய போறோம்? போராட்டத்தை எப்படி மக்கள் மயப்படுத்தப் போகின்றோம் எனும் கேள்வி எம் முன் உள்ளது. அது தொடர்பில் நாம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
அதேவேளை அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் கருத்து தெரிவிக்கையில்,
அரசியல் கைதிகளின் விடுதலையை சட்டப்பிரச்சனையாக கையாள வேண்டாம். அரசியல் பிரச்சனையாக கையாள வேண்டும். சட்டப்பிரச்சனையாக பார்த்தால் நாம் மீண்டும் பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பிலும் கதைக்க வேண்டும்.
பாதீட்டை கையில் எடுத்து போராட முடியும். அதனை நாம் முன்னெடுப்போம். சிறையில் உள்ளவர்கள் உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுப்பதால் அவர்கள் உடல் நலம் மோசமடைகின்றது.
அவர்கள் பின்னர் விடுதலை செய்யப்பட்டாலும் நோயாளியாக சமூகத்தில் வாழ வேண்டிய நிலைமை ஏற்படும். எனவே அவர்களின் போராட்டத்தை வெளியில் உள்ளவர்கள் பொறுப்பெடுத்து போராட்டத்தை முன்னெடுப்போம் என தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
14 minute ago
2 hours ago
4 hours ago