2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

‘இந்தியாவின் உதவிகளை மறக்கவில்லை’

Editorial   / 2018 செப்டெம்பர் 18 , பி.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

தமிழ் மக்களுக்கு இந்தியா செய்ததும், செய்து வருகின்றதுமான உதவிகள் உதவிகள் அளப்பரியவை. அதனை நாங்கள் மறக்கவில்லை. அதற்காக நன்றிகளையே கூறுகின்றோம். அதே நேரம் தொடர்ந்தும் உதவிகளை வழங்க வேண்டுமென்று கேட்கின்றோம் என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் பொதுநூலகத்துக்கு, இன்று (18) 50 ஆயிரம் புத்தகங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், யாழ்ப்பாண நூலகம் ஆசியாவின் சொத்தாக இருந்தது. ஆனால், அது கடந்த 1981ஆம் ஆண்டு எரிக்கப்பட்டதெனவும் தமிழர்களின் வரலாற்றில் கறைபடிந்த நாளாக அந்த நாள் மாறியதெனவும் தெரிவித்தார்.

அவ்வாறு நூலகம் எரிக்கப்பட்டதால் அங்கிருந்த நூல்கள் அனைத்தும் எரிந்ததுடன் நூலகமும் எரிந்த நிலையில் காணப்பட்டதாகத் தெரிவித்த அவர், ஆனால் அதற்கு தற்போது வர்ண பூச்சு பூசப்பட்டுள்ளது. ஆனாலும் அதனூடாக வரலாற்றை மறந்துவிட முடியாதெனவும் குறிப்பிட்டார்.

தமிழ் மக்களின் கல்வி உச்ச நிலையில் இருந்த போது அந்தக் கல்வியை அழித்துவிடுவதற்காக எடுக்கப்பட்ட முயற்சியே நூலக எரிப்பு ஆகுமெனவும் அவ்வாறு தொன்னூறாயிரம் நூல்களைக் கொண்ட நூலகம் எரிக்கப்பட்டிருக்கின்ற போது, அது இலகுவாக கட்டியெழுப்பக் கூடியதல்லவெனவும் அவர் கூறினார்.

அதற்காக புத்தகங்களை வழங்கும் இந்தியாவின் இத்தகைய உதவிகள் மிகப் பெரியவையெனத் தெரிவித்த அவர், இதனை கொண்டு வந்து கையளிக்கின்ற அமைச்சருக்கும் தமிழக அரசாங்கத்துக்கும் நன்றிகளை நாங்கள் தெரிவித்துக் கொள்ளுகின்றோமமெனவும் குறிப்பிட்டார்.

அதே போன்ற எமது மாணவர்களுக்கு இங்குள்ள தூதரகம் ஏடாக புலமைப் பரிசில்களை இந்தியா வழங்கி வருகின்றது. அழிந்து போன தேசத்தில் கல்வியை உயர்த்துவதற்காக இந்தியா செய்கின்ற இத்தகைய உதவிகள் அளப்பரியவை. அதே போன்று இந்தியாவிலுள்ள பல்கலைக்கழகங்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயற்படுவது போன்று எமது பிரதேசங்களிலுள்ள பல்கலைக்கழங்களையும் அவ்வாறு இணைத்துக் கொள்ள வேண்டும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .