2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

’எல்லைத்தாண்டும் படகுகள் அரசுடமையாக்கப்படும்’

Niroshini   / 2021 டிசெம்பர் 21 , பி.ப. 07:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்புக்குள் நுழைகின்ற இந்திய மீன்பிடிப் படகுகள் கைப்பற்றப்பட்டு, சட்ட ரீதியாக அவை அரசுடமையாக்கப்படும் என, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் - மயிலிட்டித் துறைமுகத்துக்கான விஜயத்தை, இன்று  (21) மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர், தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய இழுவை வலைப் படகுகளை பார்வையிட்ட பின்னர், பிரதேச கடற்றொழிலாளர்கள் மற்றும் துறைமுக நிர்வாகத்தினருடனான கலந்துரையாடலின் போதே, இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், மயிலிட்டித் துறைமுகத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப்  பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் இலங்கையின் கடல் வளத்தையும் பாதிக்கும் வகையில் எல்லை தாண்டி வந்து சட்டவிரோத தொழில் முறைகளில் ஈடுபடுகின்ற இந்திய கடற்றொழிலாளர்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அறிவுறுத்தல்களை வழங்கிய ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்ற கடற்படையினருக்கும் வடக்கு கடற்றொழிலாளர்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.

மேலும், அரசுடமையாக்கப்படுகின்ற படகுகளை பிரதேச கடற்றொழில் சங்கங்களிடம் கையளித்து, ஆழ்கடல் மீன்பிடி போன்ற சட்ட ரீதியான தொழில்களில் ஈடுபடுவதற்கு பயன்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

அவ்வாறு பயன்படுத்த முடியாத படகுகளை விற்பனை செய்து இந்தியக் கடற்றொழில் படகுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈட்டை வழங்கவுள்ளதாகவும், அமைச்சர் தெரிவித்தார்.

அதேவேளை, மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்தின் அபிவிருத்தி தொடர்பாக கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், "மயிலிட்டித் துறைமுகத்தின் முதலாவது கட்டப் புனரமைப்பு தவறான நோக்கங்களுக்காக முன்னெடுக்கப்பட்டமையால் சரியான முறையில் திட்டமிடப்படவில்லை.

"இதன் காரணமாக, இந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள்  இந்தத் துறைமுகத்தால் பூரணமான நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.

"இந்நிலையில், இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், பிரதேச மக்களின் கருத்துகளும் உள்வாங்கப்பட்டு இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும்"  எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X