2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

’துறவிகள் பேசக்கூடிய அளவுக்கு நிலைமை மாறியுள்ளது’

Niroshini   / 2021 ஜூலை 08 , பி.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றுபட வேண்டும் என்றும் இண்டாவது சுதந்திரத்துக்காக போராடவேண்டி இருக்கிறது என்றும் பெளத்த துறவிகள் பேசக்கூடிய அளவுக்கு நிலைமைகள் மாறி இருக்கின்றன என்பது கண்கூடாகத் தெரிகின்றது என்று, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில், இன்று (08) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அங்கு தொடர்ந்துரைத்த அவர்,  இலங்கையினுடைய இறைமையை காப்பாற்றுவதற்காக தமிழ், முஸ்லிம் மக்களை தங்களுடன் ஒன்றிணையுமாறு பெளத்த துறவிகள் கோரிக்கை விட ஆரம்பித்திருக்கிறார்களென்றார்.

இவர்கள் தான், இப்போது இருக்கக் கூடிய அரசாங்கத்தை பதவிக்கு கொண்டுவந்து முன்னணியில் நின்று அதற்கான வேலைகளை நடத்தியவர்கள் எனத் தெரிவித்த அவர், இப்பொழுது இந்த அரசாங்கம் இந்த நாட்டையே ஏலம் கோரி விற்கும் நிலைக்கு போய்விட்டது என்றும்  வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பிரதேசங்கள் சீனர்களின் பல்வேறுபட்ட தேவைகளுக்காக கொடுக்கப்படுகிறது என்றும் கூறினார். 

போரை நடத்துவதற்காக பல்வேறு நாடுகளிடம் இருந்து உதவிகளைப் பெற்றார்கள், சீனாவிடம் இருந்து விமானங்களைப் பெற்றார்கள், நிதியைப் பெற்றார்கள், ஆயுதங்களைப் பெற்றார்கள் எனக் கூறிய அவர், இன்று அதற்கு பிரதி உபகாரமாக முழு நாட்டையுமே தாரைவார்த்து கொடுக்கின்ற துர்ப்பாக்கியமான நிலை ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

"இப்பொழுது சிங்கள மக்கள் புத்திஜீவிகள் இந்த நாட்டை இறைவன் தான் காப்பாற்ற வேண்டும் என்று சொல்கிறார்கள். தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றுபட வேண்டும் என்றும் இண்டாவது சுதந்திரத்துக்காக போராடவேண்டி இருக்கிறது என்றும் பெளத்ததுறவிகள் பேசக்கூடிய அளவுக்கு நிலைமைகள் மாறி இருக்கின்றன என்பது கண்கூடாகத் தெரிகின்றது.

"பெளத்த துறவிகளோ அல்லது இந்த நாட்டினுடைய இறைமையைப் பற்றி பேசுபவர்களோ இந்த நாட்டினுடைய சகல மக்களையும் சமத்துவமாக மதித்து குறைந்தபட்சம் அவர்களுக்கான உரிமைகளை கொடுத்து சமத்துவத்தை பேணுவதில் அக்கறை உள்ளவர்களாக இல்லை என்பது முக்கியமான விடயம். 

அதுமாத்திரமல்ல இன்று இருக்கக் கூடிய மோசமான நிலையைப் பற்றி பேசக்கூடிய எதிர்தரப்பில் இருக்கக் கூடிய ஐக்கிய தேசியக் கட்சியோ, சஜித் பிரேமதாஸாவின் தலைமையில் இருக்கக் கூடிய  ஐக்கிய மக்கள் சக்தியோ கூட இந்த மாகாண சபைகளுடைய அதிகாரங்கள் பறிக்கப்படுகின்ற போது அல்லது வடக்கு, கிழக்கில் உள்ள தமிழர்களின் நிலங்களில் சிங்களவர்களை குடியேற்றுகின்ற போதோ, புதிதாக பெளத்த கோவில்கள் வருகின்ற போதோ இன்னும் மெளனம் சாதித்துக் கொண்டே இருக்கிறது. 

ஆளுந்தரப்பாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி பெளத்த மேலாதிக்க சக்திகள், தமிழ் மக்களுடைய கோரிக்கை என்றால் தூர வைத்து பார்க்கின்ற நிலைமையையே நாங்கள் பார்க்கிறோம்" என்றும், அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .