2025 மே 15, வியாழக்கிழமை

மடத்துவெளி பகுதியில் போராட்டம்

Editorial   / 2020 ஜனவரி 28 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ்

புங்குடுதீவு  - மடத்துவெளி பகுதியில் தனியால் ஒருவருக்குச் சொந்தமான காணியில் உள்ள கடற்படை முகாமை மேலும் விஸ்தரிக்கும் முயற்சி, அப்பகுதி பொதுமக்களின் எதிர்ப்பையடுத்து, தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

புங்குடுதீவு  - மடத்துவெளி பகுதியில் தனியால் ஒருவருக்குச் சொந்தமான காணியில் உள்ள கடற்படை முகாமை மேலும் விஸ்தரிக்கும் முயற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தீவகம் தெற்குப் பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலனின் ஏற்பாட்டில், இன்று (28)  கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இதன்போதே, இந்த முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டது.

புங்குடுதீவு  - எட்டாம் வட்டாரம் (J / 23), மடத்துவெளி,  ஸ்ரீ முருகன் கடற்றொழில் சங்கத்தின்  அருகில்  உள்ள தனியார் ஒருவருக்குச் சொந்தமான 10 பரப்பளவைக் கொண்ட  காணியில்,  2000ஆம் ஆண்டு காலப் பகுதியில், கடற்படையினர்  சிறிய முகாமொன்றை  அமைத்திருந்தனர்.

யுத்தம் நிறைவடைந்தப் பின்னர்,  குறித்த காணி  உரிமையாளர், தனது காணியை விடுவிக்குமாறு , கடற்படையினரிடம் கோரியபோதும், அவர்கள் அதற்குச்  செவிசாய்க்கவில்லை.

இதனால், குறித்த காணி உரிமையாளர், வீட்டுத்திட்டத்தையும் பெற்றுக்கொள்ள முடியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டார்.

இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்னர் , மேற்படி முகாமை பாரிய முகாமாக்கும் செயற்பாடுகளை  கடற்படையினர் முன்னெடுத்தனர். இதற்கு எதிரப்புத் தெரிவித்தே,  இன்று (28) காலை, இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, போராட்ட இடத்துக்கு வருகை தந்த கிராம சேவகர், தீவகம் தெற்குப் பிரதேசச் செயலக அதிகாரிகள், ஊர்காவற்றுறை  பொலிஸார்,  புங்குடுதீவுக் கடற்படை முகாம் பொறுப்பதிகாரி  ஆகியோர் போராட்டக்காரர்களுடன் கலந்தரையாடினர்.

இதையடுத்து,  முகாமை மேலும் விஸ்தரிக்கும் முயற்சி நிறுத்தப்படுமென உறுதியளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.

இக்காணி விவகாரம்  தொடர்பாக,  ஊர்காவற்றுறை  நீதிமன்றத்தில்,  காணி உரிமையாளரால்  வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .