2025 மே 21, புதன்கிழமை

'இனவாத அமைப்புக்களை தடை செய்யும் வகையில் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்'

Super User   / 2013 மார்ச் 20 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

இனவாத அமைப்புக்களை தடை செய்யும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் ஐக்கிய தேசிய கட்சியின் குருணாகல் மாவட்ட ஷஹாப்தீன் ஹாஜியார் தெரிவித்தார்.

அத்துடன் இனவாத கருத்துக்களை தூண்டுபவர்களை தண்டிக்கும் வகையிலும் நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பாக ஷஹாப்தீன் ஹாஜியார் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையிலேயே மேற்கணடவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"ஹலால் பிரச்சினைக்கு முடிவு காணப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை வாழ் முஸ்லிம்களுள் பெரும்பாலானவர்கள் இந்த முடிவை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை பரவலாக தெரிவிக்;கப்படும் கருத்துக்களின் மூலம் புரிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது.

இருந்தாலும் சமாதானத்தையும் அமைதியையும் விரும்பும் ஒரு சமூகம் என்ற வகையிலும் நாட்டின் நிரந்தர அமைதிக்கு காத்திரமான பங்களிப்புக்களை வழங்கியவர்கள் என்ற வகையிலும் தொடர்ந்து நாட்டின் அமைதிக்காக தியாகங்களை புரியக் கூடிய ஒரு சமூகம் என்ற ரீதியிலும் முஸ்லிம்கள் எப்போதுமே தலைமைத்துவத்துக்கு கட்டுப்பட்டவர்கள் உலமாக்களை மதிப்பவர்கள் என்ற வகையிலும் ஜீரணிப்பதற்கு சற்று கடினமாக இருந்த போதிலும் கூட இந்த முடிவை ஏற்று முஸ்லிம் சமூகம் இன்று அமைதிகாத்து வருகின்றது.

ஆனால் அமைதியை விரும்பும் முஸ்லிம்களின் இந்தப் பண்பை அவர்களின் பலவீனமாகவோ அல்லது தமக்குக் கிடைத்த வெற்றியாகவோ யாரும் கருதினால் அது முற்றிலும் மடத்தனமாகும்.

குட்டக் குட்ட முஸ்லிம்கள் குனிவார்கள் என்று யாரும் தப்புக் கணக்கு போட்டுவிடக் கூடாது. முஸ்லிம் அரசியல் தலைமைகள் வேண்டுமானால் சூடு சுரணை அற்று பட்டம் பதவிக்காக அரசாங்கத்திற்கு வக்காளத்து வாங்குபவர்களாக இருக்கலாம்.

ஆனால் பொதுவில் முஸ்லிம் சமூகம் அப்படிப்பட்ட இயல்பு கொண்டதல்ல. இதை உலகம் நன்கு அறியும். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் தற்போதைய முடிவை தமக்கு கிடைத்த வெற்றியாக பொது பல சேனா குழுவினர் தப்புக் கணக்கு போட்டுள்ளனர்.

ஹலால் விடயத்தில் பிரதான பௌத்த மதப் பிரிவினருக்கும் உலமா சபையினருக்கும் வர்த்தகப் பிரதிநிதிகளின் மத்தியஸ்தத்துடன் எட்டப்பட்டுள்ள முடிவை பொது பல சேனாவும் ஜாதிக ஹெல உறுமயவும் ஏற்க மறுத்துள்ளன.

ஹலால் என்ற வார்த்தையே இலங்கையில் இருக்கக் கூடாது என்ற ரீதியில் அவர்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளதோடு. இந்த விடயத்தில் இணக்கத்துக்கு வந்த பிரதான மதகுருமாரையும் அவர்கள் சார்ந்த பிரிவுகளையும் பொது பல சேனா நிந்தனை செய்துள்ளது.

வர்த்தகச் சபையையும்; சாடியுள்ளனர். இவை நாட்டுக்கும் அரசுக்கும் நல்ல சகுணங்களாகத் தெரியவில்லை. அடுத்தகட்டமாக முஸ்லிம் பெண்கள் அணியும் இஸ்லாமிய விதிமுறைகளுக்கு இசைவான ஆடை முறையில் கை வைக்கப் போவதாக பொது பல சேனா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன நல்லுறவுக்கும் நாட்டின் அமைதிக்கும் மீண்டும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள பொது பல சேனாவின் இந்தக் கருத்துக்களே அவர்களைக் கைது செய்து காவலில் வைக்கப் போதுமானவையாகும்.

ஆனால் துரதிஷ்டவசமாக இன்று நாட்டின் காவல்துறை இவர்களுக்கு காவல் காக்கப் பணிக்கப்பட்டுள்ளது. இவர்களின் அடாவடித் தனங்களை கண்கூடாகக் கண்டும் கூட சட்டமும் ஒழுங்கும் கைகட்டி வேறு பக்கம் திரும்பி வேடிக்கைப் பார்த்து நிற்கின்றன.

முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் இனிமேலும் பொறுமை காப்பது நல்லதல்ல. வெள்ளம் தலைக்கு மேலே செல்லும் முன் அணை கட்டும் முயற்சிகளை அவர்கள் தொடங்க வேண்டும். பாராளுமன்றத்தில் தமக்குள்ள சிறப்பு உரிமைகளைப் பயன்படுத்தி இந்த நாட்டின் கவனத்தை மட்டுமன்றி முழு உலகினதும் கவனத்தை ஈர்க்கும் வகையிலான நடவடிக்கைகளை அவர்கள் எடுக்க வேண்டும்.

முதல் கட்டமாக அவர்களில் ஒருவர் தனி நபராகவோ அல்லது முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கிடையிலான பேதங்களை மறந்து ஒரு குழுவாகவோ இணைந்து இனவாதம், இனக்குரோதம், என்பனவற்றை தூண்டும் சக்திகளை தடை செய்யும் வகையிலும், தேசிய ரீதியில் இன நல்லுறவுக்குப் பாதகமாக நடந்து கொள்பவர்களையும், தேசிய அமைதிக்கு இனவாத அடிப்படையில் பங்கம் விளைவிப்பவர்களையும் கைது செய்து அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனைகளைப் பெற்றுக் கொடுக்கும் வகையிலும் சட்டமூலம் ஒன்றை அவசரமாகப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

முஸ்லிம் பெண்களின் இஸ்லாமிய பாணியிலான உடைக்கு தடை விதிக்குமாறு பொது பல சேனா அரசுக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்குவதற்கு முன்னரே முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயத்தில் முந்திக் கொள்ள வேண்டும்.

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரோ அல்லது உறுப்பினர்கள் இணைந்தோ இந்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தால்,அதற்கு தேவையான ஆதரவை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்து பெற்றுக் கொடுக்க அதன் முஸ்லிம் உறுப்பினர்கள் அனைவரும் ஏற்கனவே தயார் நிலையில் உள்ளனர் என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் மிகவும் பொறுப்புடன் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.

இவ்வாறான ஒரு தேசிய நலன் கருதிய சட்டமூலத்துக்கு ஆதரவளிக்க ஐக்கிய தேசியக் கட்சி ஒரு போதும் பின் நிற்கப் போவதில்லை.இதற்கு தமிழ் தரப்பினதும், Nஐ.வி.பி என்பனவற்றின் ஆதரவும் கூட நிச்சயம் கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.

அரச தரப்பில் கூட பல உறுப்பினர்கள் பூனைக்கு யார் மணி கட்டுவது என்று தெரியாமல் தான் காத்துக் கொண்டு இருக்கின்றனர் என்பதையும் இந்த சந்தர்ப்பத்தில் கூறி வைக்க விரும்புகின்றேன்

எனவே இவ்வாறானதோர் சட்டமூலத்தைப பாராளுமன்றத்தில்;  கொண்டுவந்து நிறைவேற்றிக் கொள்ள இது அருமையானதோர் சந்தர்ப்பமாகும்.இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடாமல் முஸ்லிம் அரசியல் தலைமைகள் இது வரை விட்ட தவறுக்கான பிராயச்சித்தமாக இதைச் செய்வார்களா? முஸ்லிம் சமூகம் இதை ஆவலுடன் எதிர்ப்பாத்துள்ளது" என்றார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .