2025 ஜூலை 07, திங்கட்கிழமை

உயிரிழந்த நாயை பொதி செய்து அனுப்பிய நபருக்கு பிணை

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 09 , மு.ப. 06:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.சீ.சபூர்தீன்

உயிரிழந்த நாயொன்றை பொதி செய்து கொடுத்து அனுப்பியதாகக் கூறப்படும் ஒருவரை 50,000 ரூபா சரீரப் பிணையில் அநுராதபுரம் பிரதான மஜிஸ்திரேட்டும்  மேலதிக மாவட்ட  நீதவானுமான ருவான்னிகா மாரப்பன விடுவித்துள்ளார்.

உயிரிழந்த நாயொன்றை பொதி செய்து இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான் பஸ் வண்டிச் சாரதியொருவரிடம் கொடுத்து அனுப்பியதாகக் கூறப்படும் இச்சந்தேக நபரை நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை  கலெண்பிந்தனுவெவ பொலிஸார் கைதுசெய்தனர்.

இந்நிலையில், இச்சந்தேக நபரை நேற்று திங்கட்கிழமை அநுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோதே, அவரை நீதவான் பிணையில் விடுவித்துள்ளார்.

திவுல்வெவ பகுதியில் இ.போ.சபைக்குச் சொந்தமான பஸ் வண்டியொன்றில் கடந்த சனிக்கிழமை நாயொன்று சிக்கி உயிரிழந்துள்ளது. இவ்வாறு உயிரிழந்த நாயை புதைத்து விட்டுச் செல்லுமாறு பஸ் வண்டியின் சாரதியிடம், நாயின் உரிமையாளர் கேட்டுக்கொண்டுள்ளார். இதற்கு இந்த பஸ் வண்டிச் சாரதி மறுப்புத் தெரிவித்துள்ளதாக கலெண்பிந்தனுவெவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் கோபமடைந்த நாயின் உரிமையாளர், உயிரிழந்த நாயை பொதி செய்து மற்றுமொரு இ.போ.சபைக்குச் சொந்தமான பஸ் வண்டிச் சாரதியிடம் கொடுத்து அனுப்பியுள்ளார்.  நாயை மோதியதாகக் கூறப்படும் இ.போ.சபைக்குச் சொந்தமான பஸ் வண்டிச் சாரதியிடம் கொடுக்குமாறே உயிரிழந்த நாயை சந்தேக நபர் பொதி செய்து அனுப்பியுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இருப்பினும் ஆரம்பத்தில் நாயின் உரிமையாளரிடமிருந்து  இப்பொதியை வாங்க மறுப்புத் தெரிவித்த மற்றைய பஸ்  வண்டிச் சாரதி, பின்னர் இப்பொதியை வாங்கி தனது பஸ் வண்டியினுள் வைத்துள்ளார்.  மறுநாள் துர்வாடை வீசியதால் இப்பொதியை பஸ் சாரதி பரீட்சித்துப் பார்த்தபோது, உயிரிழந்த நாய் பொதி செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து பஸ் சாரதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதாகவும்  பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .